கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்க்கு இதுதான் சரியான தண்டனை, தமிழக மக்கள் இதைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத்தலைவர் வீரலட்சுமி.
’’வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பரப்புரைக்கூட்டத்தில் பொதுமக்களை போட்டு மிதித்துக் கொன்றது விஜய் ரசிகர்கள்தான். அவர்கள்தான் இந்த சம்பவத்திற்கு முழுமுதற்காரணம். அதனால் விஜய் ரசிகர்களுக்கு தமிழக மக்கள் யாரும் பெண் கொடுக்கக்கூடாது. அதே போன்று விஜய் ரசிகைகளுக்கு யாரும் மாப்பிள்ளை கொடுக்கக்கூடாது. அவர்களை எந்த ஆண்மகனும் காதலிக்கக்கூடாது. இதுதான் இவர்களுக்கு சரியான தண்டனை. இவர்களுக்கும் கொடுக்கும் தண்டனைதான் விஜய்க்கு சரியான பாடம். தமிழக மக்கள் இதைச்செய்தால்தான் கரூர் சம்பவத்தின் காயம் ஆறும்’’ என்று தெரிவித்தார் வீரலட்சுமி.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், கலவரத்தை தூண்டும் வகையில் கரூர் சம்பவத்தில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அரசு மீது அவதூறு பரப்பும், நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து வரும் ஹரி நாடார், யூடியூபர் சவுக்கு சங்கர், ’நேதாஜி மக்கள் கட்சி’ தலைவர் வரதராஜன் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார் வீரலட்சுமி. இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது மேற்கண்ட கோரிக்கையினை விடுத்தார்.
