
ஜெயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சதா. அந்நியன் உள்ளிட்ட நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்த சதாவுக்கு 41 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் நல ஆர்வலராக மாறிவிட்டார். காடுகளுக்குள் சென்று படம்பிடித்து வருகிறார்.
அவர் நாய்கள் இனத்தை முழுவதும் அழித்தொழிக்கும் விதத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி – என்.சி.ஆர். பகுதியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இதில் விலங்குகள் நல ஆர்வலர்கள் யாரும் குறுக்கே வரக்கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் கடந்த 11ம் தேதி உத்தரவிட்டனர்.

ஆத்திரத்தில் அறிவித்த உத்தரவு என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்த தெருநாய்களையும் அடைத்து வைக்க இடமுமில்லை என்பதால் அவற்றுக்கு உணவளிக்கவும் சிரமம் ஏற்படும். ஒன்றை ஒன்றை கடித்துக்கொண்டு இறக்கும் நிலை ஏற்படும். அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கான் பரன்ஸ் பார் ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவில்லை. விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவால் 3 லட்சம் நாய்கள் கொல்லப்படும் அவலம் நேரும் என்றுதான் கண்ணீர் வடித்திருக்கிறார் சதா.
வளர்ப்பு நாய்களை வாங்கி வளர்ப்பவர்களுக்கு இந்த அப்பாவி தெரு நாய்கள் கொல்லப்படுவதில் பங்கு இருக்கிறது. அழகான நாய்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்ற நினைப்பால் இந்த நாய்கள் தெருவில் கிடக்கின்றன. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இப்படி கொத்துக் கொத்தாக கொலைகள் நடக்கும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை.
இப்படி ஒரு செயலுக்காக நாடு வெட்கப்பட வேண்டும். யோசிக்காமல் இந்த முடிவை எடுத்தவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று ஆத்திரம் பொங்க கண்ணீர் விட்டிருக்கும் சதா, உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.