
அதிமுக ஒன்றிணைய பழனிசாமி முயற்சிக்காவிட்டால் நாங்கள் முயற்சி செய்வோம் என்கிறார் செங்கோட்டையன். இதனால், அந்த ‘நாங்கள்’ யார் யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதிமுக ஒருங்கிணைப்புக்காக கட்சிக்கு வெளியே இருந்து சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகிய மூன்று பேரும் முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், முதன் ஆளாக கட்சிக்கு உள்ளே இருந்து இணைப்பு முயற்சிக்கு குரல் கொடுத்திருக்கிறார் செங்கோட்டையன்.

இணைப்புதான் கட்சியின் நலனுக்கு நல்லது என்று எடுத்துச்சொல்லி நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சண்முகம் உள்ளிட்டோருடன் பழனிசாமி வீட்டுக்கு சென்று வலியுறுத்தியும் பலனில்லை என்பதால்தான் இப்போது இணைப்பு கோரிக்கையை பொதுவெளியில் வைத்திருக்கிறார் செங்கோட்டையன்.
பத்து நாட்களுக்குள் இந்த கோரிக்கையை பரிசீலித்து பிரிந்தவர்களை இணைக்க பழனிசாமி முயற்சிக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால் அவருடன் அடுத்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார் செங்கோட்டையன்.
அது மட்டுமல்லாது பழனிசாமியை இனியும் நம்பி பிரயோசனம் இல்லை என்று தெரிந்துவிட்டால், கட்சியில் தன்னைப்போலவே இணைப்பில் ஒத்த கருத்துடன் இருப்போருடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பை முன்னெடுப்பேன் என்று சொல்கிறார்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையிலும் ஒத்த கருத்துடையவர்கள் என்றால் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சண்முகம் உள்ளிட்டோர்தான். செங்கோட்டையன் போலவே அவர்களும் வெளிப்படையாக பழனிசாமியுடன் மோதத்தயாரா? அவர்களின் மனநிலை என்ன? என்று சலசலப்பு எழுந்திருக்கிறது அதிமுகவில்.
6 பேரும் பழனிசாமியை சந்தித்த விவரமே தனக்கு தெரியாது என்று சொல்லும் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடிக்கு எதிராக தான் எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். செங்கோட்டையன் மனம் திறந்தது குறித்து பதிலளிக்கவே மறுத்துள்ளார் செல்லூர் ராஜூ.