ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு இணையானது இந்தியாவில் ஒரு நாளில் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ரயில்வே துறையில் நடைபெறும் அலட்சியங்களால் தொடர் கதையாகிவிட்டன ரயில் விபத்துகள். அதனால்தான் ‘’இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? ’’ என்று மத்திய அரசுக்கு காட்டமான கேள்வியை எழுப்பி இருக்கிறார் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.
நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பாஹானாகாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2023ம் ஆண்டில் ஜூன் மாதம் 2ஆம் இரவு 7 மணிக்கு மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது பெங்களூரு – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதியது. மூன்று ரயில்கள் மோதி நடந்த இந்த விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாட்டையே உலுக்கி எடுத்தது இந்த ரயில் விபத்து.
அடுத்தடுத்து ரயில் விபத்துகள்:
பாலசோர் ரயில் விபத்து நடந்த சில மாதங்களிலேயே பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 4 பேர் பலியானார்கள். அதன் பின்னர் ஆந்திர மாநிலம் கண்டகாபள்ளி ரயில் விபத்தில் 19க்கும் மேற்பட்டோர் பலியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜினாமா:
ரயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று கடந்த காலங்களில் மத்திய அமைச்சர்கள் பலர் பதவி விலகி இருக்கிறார்கள். 1956ஆம் ஆண்டில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அரியலூர் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார்.
அஸ்சாம் கெய்சல் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று நிதிஸ்குமார் பதவி விலகினார். 2000ல் இரு ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று அன்றைய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா கடிதம் கொடுத்தார். ஆனால் வாஜ்பாய் அதை நிராகரித்தார். 2017ல் நடந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்தார் . அந்த வகையில் கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் என்கிறார் ராகுல்காந்தி.
இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?
’’ஒடிசா மாநிலம் பாலாசோரில் நடந்த ரயில் விபத்து போலவே கவரைப்பேட்டையிலும் நடந்துள்ளது. ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து ஏராளமான உயிர்கள் பறிபோன போதும் கூட மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. ரயில் விபத்துகளுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? என்று ரொம்பவே காட்டமாக கேட்டிருக்கிறார் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.