
இளவரசன், சங்கர், கோகுல்ராஜ் இந்தப் பெயர்களைத் தமிழ்நாடு இன்னும் மறந்துபோய்விடவில்லை. மாற்று சாதிப் பெண்ணைக் காதலித்ததால் கொலை செய்யப்பட்ட இளைஞர்கள். காதலில் ஆண் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராகவும், பெண் வேறு சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் அது பெண் குடும்பத்தாருக்கு பரம்பரை மானப்பிரச்சினையாகவும் தலைமுறை இழிவாகவும் கருதும் போக்கு இன்னமும் இந்த மண்ணில் நிலவுகிறது. அதன் விளைவு, காதல் இணையர்கள் வாழவே முடியாதபடி கொலைகள் நடக்கின்றன.
திருநெல்வேலியைச் சேர்ந்த சாஃப்ட்வேர் துறை இளைஞர் கவின் என்ற பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர் தன் பள்ளிப் பருவத்திலிருந்தே மாற்று சமூகப் பெண்ணுடன் நட்பாகப் பழகி வந்தார். தற்போதும் அவர்களின் நட்பு, காதலாக நீடித்த நிலையில், இதனை விரும்பாத அந்தப் பெண்ணின் சகோதரன் சுர்ஜித், கவினை வெட்டிக் கொலை செய்த கொடூர நிகழ்வு தமிழ்நாடெங்கும் மீண்டும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. நன்றாகப் படித்து, நல்ல வேலையில் ஊதியம் பெற்று வந்த கவினைப் பெற்றவர்கள் கடும் வேதனையுடன் தங்களுக்கான நியாயத்தை எதிர்பார்த்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள். கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் காவல்துறையின் ஆயுதப் பிரிவில் உதவி ஆய்வாளர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சி.
கவின் நல்ல நிலையில் இருந்திருக்கிறார். சுர்ஜித்தின் பெற்றோரும் பொறுப்பான அரசு வேலையில் இருக்கிறார்கள். பொருளாதார வசதி என்பது இந்த இடத்தில் எந்தப் பிரச்சினைக்கும் இடமளிக்கவில்லை. ஆனால், காலம் காலமாகத் தொடர்கின்ற, பிறப்பின் அடிப்படையிலான சாதிதான் “உன் நிலைக்கு என் தங்கையுடன் காதல் கேட்கிறதா?” என்ற மனநிலையை சுர்ஜித்துக்குள் உருவாக்கி, போலீஸ் தம்பதியின் மகனான அவனை கொலைகாரனாக்கியிருக்கிறது. சுர்ஜித் குடும்பத்தினருக்கு இந்த காதல் விவகாரம் குறித்து முன்பே தெரியும் என்பதாலும், முதற்கட்ட விசாரணைகக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பெரியார் மண் எனப்படும் தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட சாதி ஆணவப் படுகொலைகள் தொடரலாமா? இதைக் கட்டுப்படுத்த திராவிட மாடல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வரத் தயங்குவது ஏன்? என்பன போன்ற கேள்விகள் விவாதப் பொருள்களாக மாறியுள்ளன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளே இந்தக் கேள்விகளை எழுப்புகின்றன. ஆணவப் படுகொலைகள் உள்பட அனைத்து விதப் படுகொலைகளையும் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது. அதே நேரத்தில், இந்த ஆணவக் கொலைகளை அரசின் பின்புலத்திலிருந்து எவரும் செய்வதில்லை. குடும்பக்கட்டமைப்பு- திருமண பந்தம்-அவரவர் சமுதாயத்தின் பாரம்பரிய நடைமுறைகள் இவற்றுக்கு அடிப்படைக்காரணமாகவும் பெருமிதமாகவும் அவரவர் ரத்தத்தில் ஊறியிருக்கும் சாதி உணர்வுதான், பிற சாதியினரை உறவுகளாக ஏற்றுக்கொள்ளத் தயங்கும் மனநிலையை உருவாக்கி, மேல்-கீழ் என்கிற சாதிய மனோபாவத்தை வளர்த்து, வெறியாக மாற்றி, கொலை வரை கொண்டு போய் விடுகிறது.
இது தமிழ்நாட்டில் மட்டும் நிலவக்கூடிய சமுதாயக் கட்டமைப்பு பிரச்சினையல்ல. இந்தியாவின் பல ஆயிரம் ஆண்டுகாலப் பிரச்சினை. இந்த மனநிலையிலிருந்து மக்கள் மெல்ல மாறவேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட அரசியல்-சமுதாய மாற்றங்களின் விளைவாக கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை உருவாக்கப்பட்டதுடன், இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அனைத்து சாதியினரும் ஏற்றத்தாழ்வின்றி ஒரே இடத்தில் வாழக்கூடிய சமத்துவபுரங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், மற்ற மாநிலங்களில் உள்ளது போல இங்கும் சாதிய மனோநிலையுடனான வாழ்க்கை முறை நீடிக்கிறது. சாதியை வைத்து வாக்கு அரசியல் நடத்துபவர்களின் அமைப்புகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. பள்ளிக்கூடங்களில் சாதிரீதியாக வெவ்வேறு நிறங்களில் கயிறு கட்டும் நிலை தொடங்கி, வெளிநாடுகளில் உயரமான சிகரங்களில் ஏறி தங்கள் சாதிக் கொடியை நடுவது வரை இளைய தலைமுறையிடமும் அந்த சாதிஉணர்வு திணிக்கப்பட்டு, வெறியாக மாற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய கட்டமைப்புதான் சுர்ஜித் போன்ற இளைஞர்களை சாதிப்பெருமித உணர்வுடன் கொலைகாரன்களாக உருவாக்குகிறது.
தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு இது மிகப் பெரிய சவால். சாதி ஆணவக் கொலைகளுக்கு தனிச் சட்டம் என்பது, இத்தகைய கொடூரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் என உத்தரவாதமில்லை. எனினும், சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது போல கடுமையான நடவடிக்கைகள் கண்டிப்பாகத் தேவை. தனிச்சட்டமாக இருந்தாலும், தற்போதைய சட்டங்களாக இருந்தாலும் குற்றவாளி தப்பிக்கவே முடியாது என்ற உறுதியும் உத்தரவாதமும் அளிக்கும் வகையில் தண்டனைகள் வழங்கப்பட்டே ஆகவேண்டும். சாதி வெறியை மயில் இறகால் வருடிக் கொடுத்து குணப்படுத்த முடியாது. சமுதாயத்தில் புரையோடியிருக்கும் சாதி நோய்க்கு அதி தீவிர சிகிச்சை அவசியம்.