தலையைப் பார்த்தவுடன் கையை நீட்டும் பக்தர்கள் உண்டு. திருப்பதிக்குப் போய் வந்தவரின் தலையில் இருந்த முடி ஏழுமலையானுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன், கோவில் பிரசாதமான லட்டுக்காக கை நீட்டும் பக்தர்களை இப்போதும் பார்க்கலாம். வாங்கி வந்த பெரிய லட்டை பூந்தியாக்கி எல்லாருக்கும் கொடுப்பார் திருப்பதியில் பெருமாளை சேவித்துத் திரும்பிய பக்தர். இது காலம் காலமாகத் தொடரும் நடைமுறை. புகழ்பெற்ற திருப்பதி லட்டுவின் தரம் குறித்து தற்போது சர்ச்சை உருவாகியுள்ளது.
ஒரு தமிழ்த் திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில், ஒரு நடிகர் இன்னொரு நடிகருக்கு ஜிலேபி பிரசாதம் கொடுப்பார். “திருப்பதியில லட்டுக்குப் பதில் ஜிலேபி கொடுக்கணும்னு சந்திரபாபு நாயுடு மாத்திட்டாரு” என்று ஜிலேபியை கொடுத்த நடிகர் சொல்வார். பின்பு ஒரு காட்சியில், “நீ செஞ்ச எதை மறந்தாலும் மறப்பேன்.. திருப்பதியில் லட்டுக்கு பதில் சந்திரபாபு நாயுடு ஜிலேபி கொடுக்கச் சொன்னருங்கிறதை மட்டும் மறக்கவே மாட்டேன்” என்பார் ஏமாந்த நடிகர்.
அந்தத் திரைப்படம் வெளியானபோது சந்திரபாபு நாயுடு அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். இப்போது மீண்டும் அவர் முதல்வராகியிருக்கும் நிலையில், திரைப்படக் காட்சி போல திருப்பதி லட்டு சர்ச்சையாகியுள்ளது. இந்த முறை சர்ச்சையைக் கிளப்பியிருப்பவர் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவேதான். முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி பிரசாத லட்டு தயாரிப்பில் நெய்க்குப் பதில் மாட்டுக் கொழுப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. இது தொடர்பான ஆய்வறிக்கையும் வெளியாகியுள்ளது. NBBD Calf எனும் பால் பொருள் ஆய்வகம் தன்னுடைய அறிக்கையில், “திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி, மாட்டுக்கொழுப்பு, பன்றிக் கொழுப்பு உள்ளிட்டவை இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோவிலின் புனிதம் கெடுக்கப்பட்டு, பக்தர்கள் ஏமாற்றப்பட்டு, மனம் புண்பட்டிருக்கிறார்கள் என்றும், தன்னுடைய ஆட்சி வந்ததும் மீண்டும் நெய்யில் லட்டு தயாரிக்கப்படுவதாகவும் ஆந்திர மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், மோசடி நடக்கவில்லை என்று நாங்கள் குடும்பத்துடன் சத்தியம் செய்யத் தயார், சந்திரபாபு நாயுடுவும் குடும்பத்துடன் சத்தியம் செய்யத் தயாரா என சத்திய சவால் விட்டு சாமி விவகாரத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பால், நெய், கொழுப்பு ஆகியவை பசுவின் மூலமாகக் கிடைக்கக்கூடியவை என்றாலும் அவையும் மற்ற பொருட்களும் கோவில் பிரசாதத்தில் கலப்பது என்பது திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் முடிவைச் சார்ந்தது. புனிதம் கெடுக்கப்பட்டதாகக் கருதப்படும் பொருட்களை லட்டு தயாரிப்பில் சேர்க்கச் சொன்னது யார், லட்டு தயாரிக்கும் பணியில் குறிப்பிட்ட உயர் சமூகத்தினரே ஈடுபட முடியும் என்ற நிலையில் அவர்கள் எப்படி இதை அனுமதித்தார்கள்? இன்னும் என்னென்ன வகையில் மோசடிகள் நடைபெறுகின்றன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான இந்த சர்ச்சை வெளியான நாளில், தமிழ்நாட்டில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை அவர்கள் விற்பனை செய்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை. இது குறத்த ஆவணங்களை சமர்ப்பிக்கச் செய்துள்ளது நீதிமன்றம்.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோவில் இருந்தவரை ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வரை பக்தர்களின் காணிக்கை மூலமான வருவாய் கிடைத்து வந்தது. தீட்சதர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மாதம் வெறும் மூவாயிரம் ரூபாய் மட்டுமே காணிக்கை வருமானம் வருவதாக கணக்கு காட்டப்பட்டது. மேலும், கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை, தமிழ்த் திருமுறையான தேவாரம் ஓதுவதற்கு எதிர்ப்பு, பெண் பக்தர் மீது தீட்சிதர் தாக்குதல் எனத் தொடர் சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்த நிலையில்தான் இரண்டாயிரம் ஏக்கர் நிலம் விற்கப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று ஒருபுறம் வலியுறுத்திக்கொண்டே, தனிப்பட்ட நிர்வாகத்தில் உள்ள கோவில்களில் கடவுளுக்கும் பக்தர்களுக்கும் எதிரான செயல்பாடுகள் தொடர்கின்றன.