
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 95.03% சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் 0.47% சதவீதம் உயர்ந்துள்ளது.
பொதுத் தேர்வில் மாணவியர் 4,19,316; மாணவர்கள் 3,73,178 என மொத்தமாக 7,92,494 பேர் தேர்வு எழுதினர். இதில், 7,53,142 பேர் அதாவது 95.03% சதவீதத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை (93.16%) காட்டிலும் மாணவிகளின் (96.70%) தேர்ச்சி விகிதம் 3.54% சதவீதம் அதிகமாக உள்ளது.
மாவட்டம் வாரியாக பார்க்கையில், அரியலூரில் அதிகப்படியாக 98.82% சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கு அடுத்த நிலையில், ஈரோடு (97.98%), திருப்பூர் (97.53%) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

பள்ளிகள் வாரியாக பார்க்கையில், அரசுப் பள்ளிகள் 91.94 சதவீதம், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 95.71 சதவீதம் மற்றும் தனியார்ப் பள்ளிகள் 98.88 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆண்கள், பெண்கள் பயிலக் கூடிய பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகளின் எண்ணிக்கை விவரத்தைக் கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 26,887 ஆக உள்ளது. அதிகப்படியாகக் கணினி அறிவியலில் 9,536 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மேலும் தேர்வு எழுதாதவர்களும், தேர்ச்சி அடையாதவர்களும் வரும் 14ம் தேதி முதல் 31 தேதி வரையில் மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 25ம் தேதி முதல் நடைபெறும் இத்தேர்வுக்கான தேர்வு அட்டவணை நாளைய தினம் வெளியிடப்படும். மறு தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்கள் நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரி படிப்பைத் தொடரலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.