இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டுகள் வழியாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. FASTag இல்லாதவர்கள், தற்போது டோல் கட்டணத்திற்கு இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யாதவர்கள், அல்லது தவறவிட்டவர்கள் கூட ரூ.100க்குப் பதிலாக ரூ.200 செலுத்த வேண்டிய கட்டாயத்தில் சிக்கினர். இந்த பிரச்சனையை சரிசெய்ய, மத்திய அரசு ஒரு புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

பாஸ்டேக் இல்லாத வாகன ஓட்டிகள் இனிமேல், கையில் பணம் கொடுக்காமல், UPI செயலிகள் (PhonePe, GPay, PayTM) மூலம் பணம் செலுத்தினால், 2 மடங்கு அல்ல, வெறும் 1.25 மடங்குதான் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு டோல்கேட்டில் சுங்கக்கட்டணம் ரூ.100 என்று வைத்துக் கொள்ளலாம். பாஸ்டேக் இருந்தால் ரூ.100 மட்டுமே செலுத்த வேண்டிய பணம்;கையில் கொடுத்தால் ரூ.200 . இந்த கட்டணத்தில் தான் இப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி UPI மூலம் செலுத்தினால் ரூ.125 மட்டுமே.

இந்த மாற்றம் எப்போது?
இந்த புதிய சலுகை 2025 நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, FASTag இல்லாதவைகளும், கட்டணத்தை UPI வழியாக செலுத்த முடியும் – இது ஒரு குறைந்த கட்டணமாக பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தை அமல்படுத்தும் வகையில், மத்திய நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை கட்டணம் விதிகள், 2008 இல் திருத்தம் செய்துள்ளது. இந்த அறிவிப்பு, பாஸ்டேக் இல்லாத பயணிகளுக்கு சிக்கலைத் தீர்க்கும் வழியாக பார்க்கப்படுகிறது.
ஏன் இந்த மாற்றம்?
பாஸ்டேக் இல்லாதவர்களை அதிக கட்டண சுமையிலிருந்து மீட்பதற்காகவும், கையில் பணம் கொடுப்பதை கட்டுப்படுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மற்றும் டோல்கேட்டுகளில் நெரிசல் குறைக்கவே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தற்போதைய நிலை:
தற்போது நாட்டில் 98% வாகன ஓட்டிகள் FASTag பயன்படுத்தி வருகிறார்கள். மீதமுள்ள 2% பேர் தான் கையில் பணம் கொடுத்து செல்கின்றனர். அந்த குறைந்த பகுதியின் நன்மைக்காகவே இச்சலுகை அமையப்படுகிறது. இந்நிலையில், பாஸ்டேக் இல்லாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள், இன்னும் முழுமையாக டிஜிட்டல் வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும், UPI என்ற இடைப்பட்ட சலுகை மூலம் அவர்கள் செலவையும் குறைக்க முடியும், நெரிசலிலிருந்தும் தப்பிக்க முடியும். இந்த மாற்றம் பாஸ்டேக் பயன்படுத்தும் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அவர்கள் வழக்கம்போல முழுமையாக ரூ.100 மட்டுமே செலுத்துவார்கள்.
