
குழந்தைகள் மட்டுமல்லாது அவர்கள் மூலம் பெரியவர்களையும் தாக்கும் தக்காளிக் காய்ச்சல் தொற்று நோய் தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது. 2022இல் கேரளாவை அச்சுறுத்திய இந்த தொற்று தற்போது இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. இதில் இருந்து தப்பிப்பது எப்படி?
தக்காளி காய்ச்சல் பெயர் வந்தது எப்படி?
தக்காளியைப் போன்று சிவப்பாக கொப்புளங்கள் உடலில் உண்டாவதாலும் , இந்த கொப்புளங்கள் தக்காளி அளவிற்கு கூட பெரிதாவதாலும், இந்த வைரஸ் தாக்குதலின் போது காய்ச்சல் உண்டாகுவதாலும் தக்காளிக் காய்ச்சல் எனப்பெயர் வந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏன் உண்டாகிறது இந்தக் காய்ச்சல்?
சுகாதாரமின்மையினால் தக்காளிக்காய்ச்சல் பரவுகின்றன என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். ஆகவே, வீடு மற்றும் சுற்றுப்புரத்தை சுகாதாரமாக வைத்திருக்க அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

யாரை அதிகம் தாக்கும்?
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த பெரியவர்களிடையே பரவும் தொற்று நோய்தான் தக்காளிக்காய்ச்சல் .
குழந்தைகள் விளையாடிவிட்டு வரும்போது சரியாக கை,கால்களை கழுவி சுத்தமாக வராததால் இந்த தொற்று பரவுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் 1 முதல் 9 வரையிலான குழந்தைகள் இந்த தொற்றுக்கு ஆளாகிறார்கள். குழந்தைகள் மூலம் பெரியவர்களுக்கும் தொற்று பரவி அவர்களும் அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள்.
அறிகுறிகள் என்னென்ன?
முதலில் தொண்டை வலி வந்து பின்னர் அதிக காய்ச்சல் வரும். அடுத்து தோல் வெடிப்புகள், எரிச்சல், வாய், கை,கால் பாதங்களில் சிவப்பாக அரிப்புடன் கூடிய கொப்புளம் உண்டாகும்.

பாதிப்புகள் என்னென்ன?
தக்காளிக்காய்ச்சல் வைரஸ் பாதித்தால் மூட்டுவலி, உடல் வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, நீரிழிப்பு போன்றவை ஏற்படும்.
இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது என்றாலும் கவனிக்காமல் விட்டுவிட்டால் தொற்று பரவல் அதிகரித்து சோர்வை உண்டாக்கும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
தக்காளி காய்ச்சல் தொற்று நோயினால் இதுவரையிலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று ஆறுதல் அளிக்கின்றனர் மருத்துவர்கள்.

சிகிச்சை என்ன? எத்தனை நாளில் தீரும்?
தக்காளிக்காய்ச்சல் வைரஸ் பாதித்தால் ஒரு வாரத்திற்குள் தானாகவே காய்ச்சல் சரியாகிவிடும் என்றாலும், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை மேற்கொள்வதும் அவசியம் என்றும், அறிகுறிகள் தெரிந்ததுமே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
தக்காளி காய்ச்சல் தொற்று பாதித்தவர்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர்கள் குறிப்பிட்டு அறிவுறுத்துகின்றனர்.