சென்னை அருகே நேற்று இரவில் சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் என்று இரண்டு ரயில்கள் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் 11 பெட்டிகள் தடம் புரண்டன. 19 பேர் படுகாயங்களுடன் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நாடு முழுவதும் இந்த விபத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
விபத்து நடந்த இடத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த விபத்துக்கு காரணம் நாசவேலையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
என்ன நடந்தது?
மைசூரில் இருந்து வந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டிருக்கிறது. அங்கிருந்து 8. 27 மணிக்கு பொன்னேரி ரயில் நிலையம் சென்றிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிறுத்தம் கிடையாது. அதனால் மெயின் லைன் வழியாகத்தான் பாக்மதி ரயில் செல்ல வேண்டும். அதன்படியே செல்வதற்கு க்ரீன் சிக்னலும் கிடைத்திருக்கிறது. அதன்படியே ரயில் இயக்கப்பட்ட போதிலும் மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக ரயில் லூப் லைனின் சென்றிருக்கிறது. அங்கே சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. 75 கிலோ மீட்டர் வேகத்தில் 1650 பயணிகளுடன் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் 11 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. 19 பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இரவு நேரம் என்பதால் முதலில் உள்ளூர்காரர்கள் மீட்புபணியில் ஈடுபட்டனர். பின்னர் ரயில்வே ஊழியர்கள், உயரதிகாரிகள், மீட்பு குழுவினர், அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் பிரவுசங்கர் நேரில் சென்று மீட்புபணிகளை கவனித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
12 மணி நேரம் மீட்பு பணி:
கவரைப்பேட்டை ரயில் விபத்தில் விடிய விடிய மீட்பு பணிகள் நடந்தன. மழையின் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. 12 மணி நேரமாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கனமழையினால் பாதிக்கப்பட்டிருந்த மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன. 11 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக 8 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் 3 ரயில் பெட்டிகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
வெளியான போட்டோ ஆதாரம்:
விபத்து நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. தண்டவாளங்களின் இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டுள்ளன. இதனை போட்டோ எடுத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டதால்தான் மெயின் லைனின் செல்ல வேண்டிய பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனில் மாறி சென்றிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
வல்லுநர் குழு ஆய்வு:
ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் தெற்கு ரயில்வே வல்லுநர் குழு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
நாசவேலையா?
இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டுள்ளதால் இது நாசவேலை காரணமாக இருக்கலாமா? என்றும், ரயில் விபத்தில் சதித்திட்டம் இருக்கிறது என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.