கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்.ஐ.டியில் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை பெற்றுள்ளார்கள் ரோகிணியும், சுகன்யாவும்.
2024ம் ஆண்டிற்கான ஜே.இ.இ. தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவருக்கும் திருச்சி என்.ஐ.டியில் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. ரோகிணி வேதிப்பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியல் பிரிவிலும் சேர்ந்துள்ளனர்.
பழங்குடியின சமூகத்தில் இருந்து கடந்த 60 ஆண்டுகாலத்தில் இல்லாத வகையில் இந்த மாணவிகள் தேர்வு பெற்று அச்சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஜே.இ.இ. தேர்வில் தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் 73.8 சதவிகித மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் ரோகிணி.
திருச்சி மாவட்டத்தில் துறையூர் அடுத்த பச்சைமலையில் வாழும் பங்குடியின மாணவி ரோகிணி. மலைவாழ் மக்களுக்கான பள்ளியில் படித்து 12ம் வகுப்பு முடித்ததும் ஜே.இ.இ. தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இவருக்கு என்.ஐ.டி.யில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவரின் படிப்பு செலவை தமிழக அரசே ஏற்றுக்கொண்டிருக்கிறது.
தான் என்.ஐ.டியில் சேருவதற்கு காரணமாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் ரோகிணி, தனது மேல்படிப்பிற்காக உதவித்தொகை அறிவித்திருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.
பள்ளியில் படித்தப்போது ஆசிரியர்கள் தன்னை என்.ஐ.டி. ஆய்வகத்திற்கு அழைத்துச்சென்றதாகவும், அப்போதே என்.ஐ.டியில் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு, அதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டதாகவும், அதற்கு தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் ஊக்கம் தந்து உதவியதாகவும் நன்றியுடனும் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார் ரோகிணி.