அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைக்க டொனால்ட் டிரம்ப் பணம் தந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அது தொடர்பான 34 குற்றச்சாட்டுகளும் உண்மை என தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பது, அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனை பெற்ற முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ற மோசமான வரலாற்றில் இடம்பெறச் செய்துள்ளது.
அமெரிக்காவின் 45-வது அதிபராகக் கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை பதவி வகித்த டிரம்ப், அதிபராக இருந்த போதே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப் அதை ஒப்புக் கொள்ளாமல் கலவரத்தை ஏற்படுத்த முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
‘ஆபாச நடிகைக்கு பணம்’
அதிபர் பதவியில் இல்லை என்றாலும் கூட டிரம்ப் சுற்றிலும் பல சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், பல வழக்குகளும் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் தான், ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப்பிற்கு எதிராக தற்போது தீர்ப்பு வந்துள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டில் மெலனியா என்ற பெண்ணுடன் திருமணமாகி டிரம்ப் வாழ்ந்து வந்தாலும், பல பெண்களுடன் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆபாச நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ் உடனும் டிரம்ப் நெருக்கமாக இருந்துள்ளார்.
இந்த சூழலில், கடந்த 2016 அதிபர் தேர்தல் சமயத்தில் இது குறித்து பொது வெளியில் பேசக் கூடாது என்று ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் டிரம்ப் ஒப்பந்தம் செய்ததாகவும், அதற்காக டிரம்ப் $130,000 டாலர் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அமெரிக்க சட்டப்படி இதுபோல ஒப்பந்தம் போடுவதும் பணம் கொடுப்பதும் எல்லாம் சட்ட விரோதமானது இல்லை என்றாலும், டிரம்ப் அதற்குத் தேர்தல் நிதியைப் பயன்படுத்தினார் என்பதே குற்றமாக சுமத்தப்பட்டது.
இவ்விவகாரத்தில் டிரம்ப் மீது மொத்தம் 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்த நிலையில், அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளி என நியூயார்க் ஜூரி தீர்ப்பளித்துள்ளது.
மேலும், டிரம்ப்புக்கு எதிரான தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் டிரம்ப்பிற்கு அதிகபட்சமாக 4 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த தீர்ப்பை எதிராக டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அமெரிக்காவின் சட்டப்படி ட்ரம்பிற்கு சிறைத் தண்டனையே விதிக்கப்பட்டாலும் கூட அது அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யாது. அவர் சிறையில் இருந்தாலும் அங்கிருந்தபடியே அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.