
போர் நிறுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட நாடுகளின் மக்கள் நிம்மதி அடைவார்கள். எந்த நாடு வெற்றி பெற்றது, எந்த நாடு தோல்வி அடைந்தது என்ற வாதங்கள் மற்ற இடங்களில் நடைபெற்றாலும், போரிலிருந்து மீண்ட இரு நாட்டு மக்களும்தான் வெற்றியாளர்கள். இஸ்ரேல்-ஈரான் யுத்தம் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நான்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரிமை கோருகிறார்.
ஈரான் மீது முதலில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான். ஏற்கனவே இஸ்ரேல் தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவந்தது. காஸா பகுதியில் வாழும் மக்கள் உணவுக்காக அல்லாடிய பொழுதில், அவர்களுக்கு ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் உணவு வழங்க முன்வந்தன. உணவு வாங்க வந்த மக்கள் மீதும் குண்டு வீச்சு கொடூரத்தை நிகழ்த்தியது இஸ்ரேல். பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலுக்காக லெபனான் தன் எதிர்ப்பைத் தெரிவித்த போது, அதன் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் என்ற நாடு 1948ல் உருவாவதற்கும் இன்று அது தனக்கு அக்கம்பக்கத்தில் உள்ள நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் பக்கபலமாக இருப்பது அமெரிக்கா. அதிலும், டிரம்ப் வெளிப்படையாகவே முஸ்லிம் எதிர்ப்பாளர்-வெறுப்பாளர். அதனால், பாலஸ்தீன இஸ்லாமியர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு கூடுதல் ஆதரவளித்து வந்தார். பாலஸ்தீனம், லெபனானைத் தொடர்ந்து, முஸ்லிம் நாடான ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்தது இஸ்ரேல்.
முந்தைய தாக்குதல்கள் போல இது இல்லை. அமெரிக்காவின் ஆதரவுடன்தான் இஸ்ரேல் தாக்குகிறது என்பதை அறிந்த ஈரான், திருப்பித் தாக்கியது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈடாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது தாக்குதல்கள் நடந்தன. இரு நாடுகளின் சண்டைக்கு தான்தான் காரணம் என்பதைக் காட்டுகிற வகையில், ஈரானின் அணு ஆயுத மையத்தின் மீது அமெரிக்கா குண்டு வீசியது. பதிலுக்கு, கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்காவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்கள் அதிகளவில் பணியாற்றுகிறார்கள். அதனால், இந்தியாவிலும் இந்தத் தாக்குதல் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மத்திய கிழக்கு நாடுகளின் வான்வழிகள் மூடப்பட்டதால், இன்னொரு உலகப் போருக்கு வழி வகுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவிய இரவுப் பொழுது முடிந்து, இந்தியாவில் பகல் விடிந்தபோது, இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியானது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேரத் தந்தது.
இரவுக்குள் நடந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பதுதான் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த கேள்வி. இரு நாட்டுத் தலைவர்களிடமும் பேசி போர் நிறுத்தம் ஏற்படச் செய்தேன் என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப். போர் நிறுத்தத்தை மீறி ஈரான் தன் தாக்குதல்களைத் தொடர்வதாக இஸ்ரேல் தரப்பு கூறியது. போர் நிறுத்தத்தை மீறவில்லை என்று சொன்ன ஈரான் தலைமை, அமெரிக்காதான் தங்களிடம் போரை நிறுத்தும்படி வலியுறுத்தியது என்று தெரிவித்தது.
இஸ்ரேலை முன்னிறுத்தி பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, ஈரானின் கடும் தாக்குதல் தந்த அதிர்ச்சியே போர் நிறுத்தத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. இஸ்ரேல் இதுவரை இல்லாத வகையில் பாதிப்புகளை எதிர்கொண்டது. இஸ்ரேல் மக்கள் தெருவுக்கு வந்து போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், தங்கள் நாட்டின் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். ஈரானிடம் மன்னிப்பு கோரினர்.
அமெரிக்கா தனது தாக்குதல் மூலம் ஈரானை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என நினைத்தது. ஆனால், கத்தாரில் அமெரிக்க மையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா இருப்பதை அமெரிக்கா அறியும். ரஷ்யா-உக்ரைன் போரே இன்னும் முடியாத நிலையில், உக்ரைனுக்குப் பின்னணியில் இருந்து அமெரிக்கா செயல்படுவதை உணர்ந்துள்ளது ரஷ்யா. அதற்குப் பதிலடியாக, ஈரானுக்கு ரஷ்யா முன்வந்த காரணத்தால், அமெரிக்கா தன் அடிகளை பின்னோக்கி வைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது.
உலகின் ஒரே வல்லரசு என்ற பெயரில் ஆயுத விற்பனை தொடங்கி, நாடுகளுக்கிடையிலான போர்கள் வரை அனைத்து வகை நாடகங்களையும் மேற்கொண்டு வந்த அமெரிக்கா, தன் கணக்குத் தவறுவதை உணர்ந்து ஈரானிடம் போரை நிறுத்த வலியுறுத்தியுள்ளது.
மூக்குடைபட்டதால் பிளாஸ்திரி போடும் நிலை அமெரிக்காவுக்கு. ஆனாலும், அந்த பிளாஸ்திரிக்கும் ஒரு பெருமை வேண்டும் என்பதால், போர் நிறுத்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கேட்டிருக்கிறார். இப்படியும் ஓர் உலகத் தலைவர் ?