அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவுகள் நாளை(நவம்பர் 5) நடைபெற்று அன்றிரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், உலக நாடுகளின் கவனம் அனைத்தும் அமெரிக்காவின் பக்கம் திரும்பியுள்ளது.
ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
நவம்பர் 5 வாக்கெடுப்புக்கு முன்னதாக, வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக 7 இழுபறி மாநிலங்களிலும், டிரம்ப் முன்னிலை வகிப்பதாக பிரபல AtlasIntel நிறுவனத்தின் சமீபத்திய கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
சுமார் 49% பேர் டொனால்ட் டிரம்பிற்கும், 47.2% பேர் கமலா ஹாரிஸுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளதாக AtlasIntel-ன் கணிப்புகள் கூறுகிறது.
2024 அமெரிக்க அதிபர் தேர்தல் அதன் இறுதி நாட்களை எட்டியுள்ள வேளையில், அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 மாநிலங்களும் வெற்றியை தீர்மானிக்கும் மாநிலங்களாக விளங்குகின்றன.
அந்த 7 மாநிலங்களிலும், கமலா ஹாரிஸை பின்னிக்குத்தள்ளி டிரம்ப் முன்னிலை வகிப்பதாக AtlasIntel கூறுகிறது.
1980 முதல் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் தொடர்ந்து வெற்றி பெற்ற மாநிலங்கள் சிவப்பு மாநிலங்களாகவும், அதே சமயம் 1992 முதல் கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தியவை நீல மாநிலங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது.
இந்த மாநிலங்கள் பொதுவாக அவர்களின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கணிக்கக்கூடியதாகக் கருதப்படுகிறது.
இழுபறி மாநிலங்களில், குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான போர் பெரும்பாலும் மிக நெருக்கமாக இருக்கும், மிக சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். உதாரணமாக, 2020 அதிபர் தேர்தலில், ஜோ பைடன் அரிசோனாவில் வெறும் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த வாரம் அக்டோபர் 29 அன்று வெளியிடப்பட்ட ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக் கணிப்புகள், டொனால்ட் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னணியில் இருப்பதாகக் கூறியுள்ளது. டொனால்ட் டிரம்ப்பை விட கமலா ஹாரிஸ் ஒரு சதவீத வாக்கு வித்திசாத்தில் முன்னிலையில் உள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதல் ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் வெளியிட்ட ஒவ்வொரு கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் கமலா ஹாரிஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முறை:
அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. “Electoral College” எனப்படும் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அமெரிக்காவின் மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகளின் வாக்குகள் இருக்கும். எடுத்துக்காட்டாக, கலிபோர்னியா மாநிலத்திற்கு 54 வாக்குகளும், டெக்சாஸ் மாநிலத்திற்கு 40 வாக்குகளும் உண்டு.
50 மாநிலங்கள் மற்றும் தலைநகரப் பகுதியான வாஷிங்டன் டி.சி.யை சேர்த்தால், மொத்தம் 538 Electoral College வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். வாக்காளர்கள் மாநில அளவில் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தான் தேர்வு செய்வார்கள். தேசிய அளவில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்களை அல்ல.
அதாவது, எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாநிலத்தின் அனைத்து Electoral College வாக்குகளும் அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, டெக்சாஸ் மாநிலத்தில் ஒரு வேட்பாளர் 50.1% வாக்குகளைப் பெற்றால், அவருக்கு அம்மாநிலத்தின் 40 வாக்குகளும் வழங்கப்படும்.
இந்த முறையால் தான், கடந்த 2016-ம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் டிரம்பை விட 30 லட்சம் வாக்குகளை கூடுதலாகப் பெற்ற போதிலும், Electoral College வாக்குகளை குறைவாக பெற்றதால் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.