கூட்டணியில் இருந்தபோதே அண்ணாமலையும் எடப்பாடி ஆதரவாளர்களும் மாறி மாறி வசைமாரி பொழிந்து வந்தனர். இதில் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் இரு தரப்பினரும் ஒருவரை மாற்றி ஒருவர் போட்டுத்தாக்கிக்கொள்கிறார்கள்.
அண்ணாமலை ஒன்று சொல்ல, அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒன்று சொல்ல, பதிலுக்கு அண்ணாமலை சொல்ல, இப்போது எடப்பாடி ஆதரவாளர்கள் பிடித்துக் கொண்டுவிட்டனர்.
மோடியின் முதுகில் குத்தியவர் எடப்பாடி. நம்பிக்கை துரோகத்திற்கு மறுபெயர் எடப்பாடி பழனிச்சாமி என்று அண்ணாமலை சொன்னதில் ரொம்பவே கொதித்துப்போயிருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’எலும்பில்லாத நரம்பில்லாத நாக்கினால் நாகரீகமற்ற அரசியல் பண்பாட்டை விதைத்து வருகிறார் அண்ணாமலை. அரசியலுக்கு தேவையான தகுகியான பண்பு எதுவும் இல்லை அண்ணாமலையிடம்.
தன்னால் பாஜக வளர்ந்துவிட்டதாக வாய்ஜாலம் காட்டுகிறார் அண்ணாமலை. ஆனால், 15 ஒன்றிய அமைச்சர்கள், பிரதமர் வந்து பிரச்சாரம் செய்தும் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. அண்ணாமலை போன்ற தகுதி, அனுபம் இல்லாத அரைவேக்காடுகளால் தான் பாஜகவுக்கு இன்றைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதிமுக வளர்ச்சியை, எடப்பாடி பழனிச்சாமியின் வளர்ச்சியை அண்ணாமலையால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த வயிற்றெரிச்சலில்தான் எடப்பாடி பழனிச்சாமியை துரோகி என்கிறார். இந்த வார்த்தையை அண்ணாமலை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட எந்த போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்.
ஒரு தலைமைக்கான பண்பு என்பது ரகசியம், நம்பிக்கை காக்கப்பட வேண்டும். நாளை இவர் டெல்லி தலைமை பேசியதை கூட வெளியிடுவார். டிடிவி தினகரனை வாழாவெட்டி ஆக்குவதற்காகத்தான் வீடுதேடி சென்று அவரை சந்தித்துள்ளார் அண்ணாமலை’’ என்று கடுமையாக விளாசி எடுத்திருக்கிறார்.
ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து பிரித்து தனித்து தவிக்க விட்டிருப்பது போல் தினகரனையும் விடப்போகிறார் என்றுதான் விமர்சித்திருக்கிறார் உதயகுமார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டது அமமுக. தேர்தலுக்கு பின்னர் சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் அண்ணாமலை. இதைத்தான் உதயகுமார் விமர்சித்துள்ளார்.