
பிளிரும் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலர் வைத்து சிவப்பு மஞ்சள் வண்ணத்தில் தனது தவெக கொடியை இன்று வெளியிட்டிருக்கிறார் விஜய்.
கட்சிக்கொடியை விஜய் வெளியிட்டதுமே அக்கொடியில் இருந்த யானைகள் பகுஜன் சமாஜ் தேசியக்கட்சியை நினைவுபடுத்தின. அதற்கேற்றார் போல் அந்த தேசிய கட்சியும் விஜய் கட்சிக்கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிஎஸ்பி எனும் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய், தவேக கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுக்கப்படும். மற்றும் வழக்கும் தொடுக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் அறிவித்துள்ளார்.
மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது குறித்து தேசிய தலைமையிடம் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நீல நிறத்தில் ஒரே ஒரு யானைதான் பகுஜன் சமாஜ் கட்சியின் கொடி. ஆனால், தவெகவில் இரண்டு யானைகள் உள்ளது என்று தவெகவினர் பதில் கொடுத்து வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க, அதிமுகவின் இரட்டை இலை போன்று இது இரட்டை யானை என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். கேரள அரசின் சின்னம் இது போன்று இருப்பதால் கேரள அரசு விஜய் கட்சி கொடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்றும், பெவிக்கால் நிறுவனமும் தவெக கொடிக்கு தடைகோரும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.