
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் இன்று கட்சிக்கொடியை அறிமுகம் செய்திருக்கிறார். விரைவில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என்றும், அந்த மாநாட்டில் கட்சிக்கொடியின் வரலாறு சொல்லப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
விஜய் கட்சி கொடி அறிமுகம் செய்ததற்கு அதிமுக, தமாகா, பாஜக, காங்கிரஸ் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘’விஜய் அரசியல் போட்டியில் இறங்கியதை வரவேற்கிறோம். உண்மையான மதச்சார்பின்மையை விஜய் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்று பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் அறிவுறுத்தி இருக்கிறார். ’’மதவாத சக்திகளுக்கு எந்த காலத்திலும் துணை போய்விடக்கூடாது. அப்படி செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். அதுதான் என்னுடைய வேண்டுகோள்’என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

கார்த்திக் சிதம்பரம் எம்.பியோ, ‘’கட்சிக்கொடி, கலர் , லெட்டர் பேடு இதையெல்லாம் வைத்து மக்கள் முடிவு செய்ய மாட்டார்கள். கொடியை வைத்து எதையும் கூற முடியாது. அவரின் நிலைப்பாட்டை வைத்துதான் இவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று ஒரு முடிவுக்கு வர முடியும். கட்சி அறிவிப்பது பெரிய விஷயமல்ல. நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்டவற்றில் தனது நிலைப்பாடு என்ன என்பதை விஜய் தெரிவிக்க வேண்டும்.

ஒரு புத்தகத்தை உள்ளே படித்துவிட்டுத்தான் அது எப்படி என்று சொல்ல முடியும். அட்டைப்படத்தை பார்த்துவிட்டு கலர் நன்றாக இருக்கிறது என்று என்னாலும் சொல்ல முடியாது.
தனியாக கட்சி நடத்துகிற சிரமம் பட்டால்தான் தெரியும். சகோதரர் விஜய்யும் பட்டு தெரிந்துகொள்வார்’’ என்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.