தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி ஈயடிச்சான் காப்பி என்றும், பிற கட்சிகளின் கொடி களவாடப்பட்டுள்ளது என்றும் எதிர்ப்புகள் வலுக்கின்றன. இதனால் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் தடை போடுமா என்றால், சட்டத்தில் அதற்கு இடமில்லை என்பதால் விஜய் மகிச்சியில் உள்ளார் என்கிறது தவெக வட்டாரம்.
தங்கள் தேசிய கட்சியின் சின்னம் யானை தவெக கொடியில் உள்ளது அரசியல் சட்டப்படி தவறு என்றும், அதனால் கொடியில் உள்ள யானை படத்தை மாற்ற வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் பி.ஆனந்தன் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளார். தவெக கொடியில் இருந்து யானை படத்தை அகற்றாவிட்டால் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்றும் பி.ஆனந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தவெக கொடியில் உள்ள சிவப்பின் நடுவே மஞ்சள் என்ற வண்ணம் தங்களின் கட்சிக்குரியது என்றும், இதை ஈயடிச்சான் காப்பி செய்துள்ளார் விஜய். கொடியின் நடுவே புலி படத்திற்கு பதிலாக யானை படத்தை வைத்துள்ளார் என்று வெள்ளாளர் முன்னேற்றக்கழகம் குற்றம்சாட்டுகிறது.
கட்சிக்கு சொந்தமாக கொடியை சிந்திக்க முடியாத விஜய், இன்னொரு கட்சிக்கொடியை திருட்டுத்தனமாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இதுகுறித்து அனுப்பிய நோட்டீஸ்க்கு பதில் சொல்ல திராணியில்லாத அரசியல் தலைவராக உள்ளார் விஜய் என்று சொல்லும் விஎம்கே, தவெக கொடியை மாற்றக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளோம். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வராவிட்டால், விஜய்யும் கட்டுப்படாவிட்டால் முக்குலத்தோர் புலிகள் சங்கத்துடன் இணைந்து விஜய் வீட்டை முற்றுகையிடுவோம் என்று வெள்ளாளர் முன்னேற்ற கழகம் அறிவிப்பு செய்துள்ளது.
இதனால் தவெக கொடிக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்குமாஅ? அல்லது நீதிமன்றம் தடை விதிக்குமா? என்ற சந்தேகம் எழுந்திருக்கும் நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சியில் உள்ளாராம் விஜய். தவெக கொடிக்கு சிக்கல் ஏதும் இல்லை என்று தெரிந்துகொண்ட பின்னர்தான் மாநாட்டிற்கு அனுமதி கேட்கச்சொன்னாராம் விஜய்.
கொடிக்கு எதிர்ப்புகள் வந்ததுமே ரொம்பவே டென்ஷனான விஜய், தனது வழக்கறிஞர்களை அழைத்துப் பேசியிருக்கிறார். அவர்களோ, இது ஒரு பிரச்சனையே இல்லை. நீங்க அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு கட்சி பயன்படுத்தும் சின்னத்தைதான் வேறு கட்சி பயன்படுத்த முடியாது. ஆனால், ஒரு கட்சி பயன்படுத்தும் நிறங்களை, அடையாளங்களை வேறு கட்சி பயன்படுத்தலாம். அது விதிமீறல் இல்லை. சட்டரீதியாக எந்த தடையும் இருக்காது. இதற்கு தேசிய அளவில் பல முன்னுதாரணங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சியின் யானையும் தவெக கொடியில் உள்ள யானையும் ஒரே மாதிரியாக இல்லை. தவெக கொடியில் தான் யானை இருக்குதே தவிர சின்னம் அதுவல்ல. அதனால் தவெக கொடிக்கு சிக்கல் வராது. தேர்தல் ஆணையம் தடை விதிக்க முடியாது . அப்படியே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் அதை சமாளிக்கலாம். அதனால் தவெகவுக்கு எந்த பாதிப்பும் வராது என்று உறுதியாக சொல்லி இருக்கிறார்கள்.
இதன் பின்னரே நிம்மதிப்பெருமூச்சு விட்டிருக்கும் விஜய், கட்சிப்பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம்.