அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் இந்திய தேசத்தை மீட்டெடுத்ததில் பெண்களின் பங்கு முக்கியமானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான வீரப்பெண்மணிகளும் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் நிலையில், அவர்களில் குறிப்பிடத்தக்க இருவர் வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள். அதனால்தான் இருவரின் கட் -அவுட்களும் தவெக முதல் மாநில மாநாட்டில் இடம்பெற்றுள்ளன.
தென்னாட்டு ஜான்சி ராணி:
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் அஞ்சலை அம்மாளின் பேரன்.
இந்த அஞ்சலை அம்மாள் கடலூரில் சுன்னாம்புக்கார தெருவில் 1890ல் பிறந்தவர். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே திண்ணைப்பள்ளியில் பயின்றுள்ளார். 1908ல் நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருந்த முருகப்பாவை திருமணம் செய்துகொண்டார்.
சின்ன வயதில் இருந்தே ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை கேட்டறிந்து கொதித்தெழுந்திருந்த அஞ்சலை அம்மாள், 31 வயதில் விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தார். கணவருடன் சென்னை இடம்பெயர்ந்து விட்டாலும் சொத்துக்களை விற்று சென்னையில் விடுதலை போராட்டங்களை நடத்தி வந்தார்.
தன் வீர பேச்சினால் சுதந்திரப்போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கெடுக்க காரணமானார். பெண்களை திரட்டி மதுவிலக்கு கோரி கிராமம் கிராமமாக சென்று மறியல் போராட்டங்களை நடத்தி சிறை சென்றார்.
1921ல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி அஞ்சலை.
1857ல் சிப்பாய் கலகத்தில் விடுதலைக்காக போராடிய பல்லாயிரக் கணக்கானோரை கொலை செய்ய காரணமாக இருந்த நீலன் சிலை சென்னையில் இருந்தது. இந்த சிலையை 1927ல் அகற்றும் போராட்டத்தில் சிலையை உடைத்ததாக கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்தார். இந்த போராட்டத்தில் தாயுடன் பங்கேற்ற 9 வயது அம்மாக்கண்ணுவும் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றார்.
இத்தனை சிறு வயதிலேயே போராட்டத்தில் பங்கேற்று காந்தியடிகளை ஈர்த்தார் அம்மாக்கண்ணு. அதனால் தமிழ்நாடு வரும்போதெல்லாம் அம்மாக்கண்ணுவை சந்தித்திருக்கிறார். அப்படி ஒரு சந்திப்பில் அம்மாக்கண்ணுவுக்கு லீலாவதி என்று பெயர் வைத்து, குஜராத்தில் உள்ள தனது வார்த்தா ஆசிரமத்திற்கே அழைத்து சென்றிருக்கிறார்.
1931ல் கடலூரில் நடந்த உப்புசத்தியாகிரக போராட்டத்தில் கைதாகி வேலூர் சிறையில் இருந்த போது நிறைமாத கர்ப்பிணி. பிரசவத்திற்காக ஒரு மாதம் பரோல் கேட்டு வந்தவர், மகன் பிறந்ததும் ’ஜெயில் வீரன்’ என்று பெயரிட்டு, மீண்டும் பச்சிளங் குழந்தையோடு சிறைக்குச் சென்றார். அதே 1931ல் சென்னையில் நடந்த அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு அஞ்சலைதான் தலைமை தாங்கினார்.
கடலூர் வழியாக செல்லும் தலைவர்கள் அஞ்சலை அம்மாள் வீட்டில் உணவு அருந்திவிட்டுத்தான் செல்வார்கள். திருவண்ணாமலையில் நடந்த காங்கிரஸ் எழுச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கடலூர் வழியாக சென்ற காந்தியை சந்திக்க துடித்தார் அஞ்சலை. ஆனால், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளால் காந்தியடிகளை சந்திக்க முடியாத நிலை இருந்ததது. பர்தா அணிந்து சென்று தடையை மீறி காந்தியை சந்தித்தார். அவரின் துணிச்சலை பார்த்து வியந்த காந்தி, தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டினார்.
அஞ்சலை வாய்க்கால்:
மூன்று முறை கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தன் தொகுதிக்கு பெரிதும் பாடுபட்டார். பெரிய பிரச்சனையாக இருந்த தீர்த்தாம்பாளையம் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தார். நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வந்த நிலையில், பெண்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலையை மாற்ற, புவனகிரிக்குச் செல்லும் வீராணம் வாய்க்காலில் இருந்து தீர்த்தாம்பாளையத்திற்கு கிளை வாய்க்காலை கொண்டு வந்தார். இதனால் அந்த வாய்க்காலை அஞ்சலை வாய்க்கால் என்று அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
அஞ்சலை அம்மாளுக்கு சிலை:
விடுதலைக்கு பின்னர் அரசு தியாகிகள் ஓய்வூதியம் வழங்கியபோது அதை மறுத்துவிட்டார் அஞ்சலை அம்மாள். தன் சொத்துக்களை விற்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு ஓய்வுதியம் எப்படி பெரிதாகத் தெரியும்?
இறுதிக்காலத்தில் முட்லூர் கிராமத்தில் வாழ்ந்து விவசாயப்பணிகளை மேற்கொண்டு வந்தவர் 1961ல் மறைந்தார். அந்த சுதந்திர போராட்ட தியாகிக்கு கடலூர் காந்தி பூங்காவில் சிலை திறந்து வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.