அரசியலில் நீ என்னை விட சீனியர். சிறப்பாக பேசுகிறாய் என்று தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு கோட் படக்குழுவுடன் சென்றிருந்தார். விஜயகாந்த் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த பின்னர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடமும், விஜயகாந்த் மகன்களிடமும் வெகுநேரம் மனம் திறந்து பேசிவிட்டுச்சென்றார் விஜய்.
கோட் படத்தில் புதிய தொழில் நுட்பத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளதால் கோட் படக்குழுவினரும் அந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர்.
2026ல் தேமுதிகவுடன் தவெக கூட்டணியா? அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்த கேள்விகளுக்கு பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
’’விஜய் எங்க வீட்டுப்பிள்ளை மாதிரி. விஜய்யும் இதே சாலிக்கிராமத்தில்தான் எங்கள் வீட்டிற்கு அருகேதான் பல ஆண்டுகள் இருந்தார். அவரது அப்பாவும் கேப்டனும் நல்ல நட்பில் இருந்ததை உலகமே அறியும். கோட் படத்தில் கேப்டன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரொம்ப பிரம்மாண்டமாக வந்திருக்குது. உங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அழைக்கிறோம். வந்து பாருங்கம்மா’’ என்று சொன்னார் விஜய்.
அப்புறம் என் மகன்களிடம் ரொம்ப மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தபோது, ’’அண்ணா சினிமாவில் நீங்கதான் எனக்கு முன்னுதாரணம்’’ என்று விஜய்யைப்பார்த்து சொன்னார் சண்முகபாண்டியன். உடனே விஜய், ‘’அரசியலில் நீ என்னை விட சீனியர். மேடைகளில் ரொம்ப நல்லா பேசுறப்பா நீ. பத்திரிகையாளர்களை கையாளும் விதமும் சிறப்பு. வாழ்த்துக்கள்’’ என்று விஜயபிரபாகரனை பார்த்துச்சொன்னார் எனச்சொல்லி சொல்லி நெகிழ்ந்தார்.