தவெக மாநாட்டிற்கு முன்பிருந்தே விஜய்யை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு உத்தரவு போட்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைகிறது என்ற பேச்சு இருந்த நிலையில் கட்சியினருக்கு இந்த உத்தரவினை போட்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
விஜய்யும் மாநாட்டில் அதிமுக குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. அதிமுகவை ஏன் விஜய் விமர்சிக்கவில்லை? என்ற கேள்விக்கு, அதிமுகவை விமர்சிக்கும் அளவிற்கு எதுவும் இல்லை. அதனால் விஜய் விமர்சிக்கவில்லை என்று சொல்லி இருந்தார் இபிஎஸ்.
மாநாட்டிற்கு முன்பிருந்தே கூட்டணி தொடர்பாக அதிமுக சார்பில் சிலர் விஜய்யுடன் பேசி இருக்கிறார்கள். அதனால்தான் மாநாட்டில் அதிமுகவை விஜய் விமர்சிக்கவில்லை என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இபிஎஸ் மகன் மிதுன், விஜய்யை சந்தித்து பேசியபோது, ’’அப்பா முதல்வராக இருப்பார்; நீங்க துணை முதல்வராக இருங்கள்’’ என்று சொல்லி விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்.
இந்த பேச்சுவார்த்தை இன்னும் முடிவாகாமல் உள்ள நிலையில் தவெக மட்டுமல்லாது பிற கட்சிகளையும் கூட்டணிக்குள் இழுக்க இபிஎஸ் முயன்று வருவதால்தான் இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் திமுக , பாஜகவைத்தவிர வேறு எந்த கட்சியையும் விமர்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
தவிர, உட்கட்சி பூசலை தவிர்த்து கட்சியை பலப்படுத்த, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை அதிமுகவுக்காக பணியாற்ற வைக்கும் முயற்சியிலும் தீவிரமாக உள்ளார் இபிஎஸ் என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம்.