தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்திய அதன் தலைவரும் நடிகருமான விஜய், தனது கட்சியின் கொள்கையிலும், தனது பேச்சிலும் பா.ஜ.க.வை சித்தாந்த எதிரியாகவும், தி.மு.க.வை அரசியல் எதிரியாகவும் பெயர் குறிப்பிடாமல் அடையாளப்படுத்தினார். இரண்டு கட்சிகளின் சார்பிலும் தலைமையிலிருந்து நேரடியான பதிலோ விளக்கமோ இல்லை. அடுத்தகட்ட நிலையில் இருப்பவர்கள் விஜய்யின் அரசியல் பார்வையைக் கடந்து செய்வது போலவே பதிலளித்தார்கள்.
விஜய்யையும் அவரது கட்சியும் கடுமையாக விமர்சித்திருப்பவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்தான். “பெரிய நடிகர்களுக்கு கூட்டம் கூடுவது வழக்கம்தான்” என்று பேட்டி கொடுக்கத் தொடங்கி, “விஜய்க்கு கூட்டம் கூடினாலும் அந்தக் கூட்டத்தில் இருந்த பலரும் தனக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்” எனத் தொடர்ந்து, அதன்பிறகு ஒரு பொதுக்கூட்டத்தில், “வாட் ப்ரோ?” என்று இமிடேட் செய்து, “ஒண்ணு இந்தப் பக்கம் நில்லு.. இல்லேன்னா அந்தப் பக்கம் நில்லு.. இரண்டுக்கும் நடுவில் நின்றால் லாரியில் அடிபட்டு…” என்று மிக மோசமாக விமர்சித்தார். ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், புதிதாக கட்சி தொடங்கிய ஒருவரை நோக்கி எந்த வார்த்தைகளை சொல்வது மரபோ-பண்போ இல்லையோ, அந்த வார்த்தைகளை சீமான் பயன்படுத்தியிருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட சித்தாந்தத்திற்கு எதிராக தமிழ்த் தேசியத்தை கட்டமைத்து வருபவர் சீமான். திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலிருந்தே இது போன்ற கருத்துகள் வெளிப்பட்டு, பல தலைவர்கள் அதை முன்னெடுத்திருந்தாலும், ஈழப்பிரச்சினையை அடிப்படையாக வைத்து, 2009க்குப் பிறகு இதை சீமானும் அவரது கட்சியினரும் வலிந்து கட்டமைத்து வந்தார்கள். திராவிடம் ஒருபோதும் தமிழுக்கு எதிரானதில்லை என்பதையும், திராவிடம்தான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்ததுடன், தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்கு பெயர் சூட்டியது என்பதையும் திராவிட இயக்கத்தினர் தொடர்ந்து முன்வைத்தபோதும், சீமான் கட்சியினர் தங்கள் போக்கிலேயே தடாலடியாகப் பேசி வந்தனர்.
விஜய் தனது மாநாட்டு உரையில், “திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை. திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரண்டு கண்கள்” என்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். கடந்த 10, 15 ஆண்டுகளாக அவர்களை ஈர்க்கக்கூடிய தரப்பிடமிருந்து இந்தக் கருத்து வெளிப்படவில்லை. விஜய் பேசியதும் அது பேசு பொருளானது. சீமானின் நாம் தமிழர் கட்சியினரோ, தாங்கள் கட்டமைத்து வந்தது சிதைகிறது என்பதாலும், தாங்கள் ஈர்க்க நினைத்த இளைஞர்கள் விஜய் பக்கம் செல்லக்கூடிய அரசியல் சூழல் அமைவதாலும் பதற்றமடைகிறார்கள். அதன் விளைவுதான், விஜய்யை நோக்கி, ‘லாரியில் அடிபட்டு’ என்கிற அளவிற்கான சீமானின் பேச்சு.
த.வெ.க. கடந்த ஞாயிறன்று (நவம்பர் 3) நடத்திய செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தில் தனது கொள்கைகளை விளக்கியதுடன், பா.ஜ.க. அரசையும் தி.மு.க. அரசையும் விமர்சித்தும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதற்கு காரணம், தாங்கள் குறி வைக்க வேண்டியது ஆட்சியில் இருப்பவர்களைத்தான் என்பதாலும், அரசியலுக்குள் புதிதாக நுழைந்துள்ள நிலையில், தாங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை என்பதாலும்தான்.
தி.மு.க.வை த.வெ.க. விமர்சிக்கிற நிலையில், அ.தி.மு.க. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க. என்பது தி.மு.க.வையும் அதன் தலைமையையும் எதிர்த்து உருவான இயக்கம். தி.மு.க. வலிமையாக இருக்கும்வரை அ.தி.மு.க.வும் தன் எதிர்ப்பு அரசியலை நடத்த முடியும். அதே நேரத்தில், தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை த.வெ.க. போன்ற புதிய கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கும்போது அது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியைத்தான் பாதிக்கும். அதனால், விஜய்யையும் அவரது கட்சியையும் சீண்ட வேண்டாம் என்கிற போக்கை அ.தி.மு.க தலைமை கடைப்பிடிக்கிறது. த.வெ.க.வும் அ.தி.மு.க.வினரின் அதிருப்தியைப் பெறக்கூடாது என்று செயல்படுகிறது.
பா.ஜ.க.விடம் வலிமையான ஆட்சியதிகாரம் இருப்பதால், விஜய்க்கும் அவரது கட்சிக்கும் எதிராகக் கயிற்றை விட்டுப் பிடிக்கும் லாவகம் அதற்குத் தெரியும். தி.மு.க.வைப் பொறுத்தவரை, பா.ஜ.க.வையும் அ.தி.மு.க.வையுமே தனக்கான கள அரசியல் எதிரிகளாகக் கருதுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், சீமானுக்கு விஜய் பதில் சொல்வார் என்று பார்த்தால், நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்திருக்கிறார். களத்தில் யார் எந்த உயரத்தில், என்ன தகுதியில் இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் இது. இவ்வளவுதான் அரசியல்.