கொடி, கொள்கை, இலக்கு இவற்றை விளக்குவதற்கான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை (பொதுக்கூட்டம்) விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டியிருக்கிறார் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய். ரசிகர்களான இளைஞர்கள் தொண்டர்களாத் திரண்டிருந்ததும், பெண்கள் ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையும் கட்சித் தொடக்க மாநாட்டின் பலம். விஜய்யின் பேச்சில் தி.மு.க. மீதான எதிர்ப்பு-விமர்சனம் ஆகியவற்றுடன் தி.மு.க.வுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் சவாலாக இருக்கக்கூடிய அம்சங்களும் இடம்பெற்றன. வேறு எந்தக் கட்சியையும் விஜய் தன் பேச்சில் பெரிதாக விமர்சிக்கவில்லை.
‘மக்களை ஏமாற்றும் திராவிட மாடல்’, ‘ஒரு குடும்பத்தின் அரசியல்’, பாசிசம்-பாயசம்’ என்று ஆளுங்கட்சியான தி.மு.க.வை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சி மீதான விமர்சனங்களை வைத்தால்தான் மக்களிடம் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள முடியும். எம்.ஜி.ஆர். அதை செய்தார். கட்சியை வளர்த்து ஆட்சிக்கு கொண்டு வந்தார். வைகோ அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க. மீதான விமர்சனத்தையே முழுமையாக வைத்தார். அதனால், அவருடைய கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. விஜயகாந்த் தன் கட்சியை ஆளுங்கட்சியான அ.தி.மு.க-எதிர்க்கட்சியான தி.மு.க என இரண்டுக்கும் மாற்றாக முன்னிறுத்தினார். தனக்கான அடையாளத்தை அரசியலில் பெற்றார்.
விஜய் தன்னுடைய அரசியல் எதிரியாக தி.மு.க.வையே முன்னிறுத்திப் பேசியிருக்கிறார். அதுமட்டுமின்றி, த.வெ.க. ஆட்சிக்கு வந்தால், அதனுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தன்னுடைய அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை அடிக்கடி எழுப்பி வரும் நிலையில், விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் கவனிக்கப்படக்கூடியதாக அமைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தரப்பிலிருந்தும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்திருப்பதை மறந்திருக்க முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வையும் அதன் கூட்டணியையும் குறிவைத்துள்ளது த.வெ.க.
அரசு நிர்வாகம் தொடர்பான விமர்சனங்களில் ‘ஊழலை ஒழிப்போம்’ என்ற பொதுவான முழக்கத்தை விஜய்யும் அவரது கட்சியும் முன்வைத்துள்ளது. ஆனால், ஊழலுக்காகவே தண்டிக்கப்பட்ட தலைமையைக் கொண்ட, தமிழ்நாட்டில் அதிககாலம் ஆட்சி செய்த கட்சியுமான அ.தி.மு.க. குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ விஜய் எதுவும் பேசவில்லை. தி.மு.க. எதிர்ப்பை முன்வைக்கும்போது, அ.தி.மு.க. ஆதரவாளர்களைத் தன் பக்கம் இழுக்கலாம் என்ற அரசியல் உத்தியாகவும் இது இருக்கலாம்.
அரசியலில் எதிரி என தி.மு.க.வை குறியீடாகக் காட்டிய விஜய், தனது கொள்கை-தத்துவ எதிரி என ‘பிளவுவாத’ சக்திகளைக் குறிப்பிட்டிருக்கிறார். பிளவுவாத சக்திகள் என்றால் யார்? யார் யார்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை முன்னிறுத்தியதன் மூலமும், வர்ணாசிரம அடிப்படையிலான சாதி பேதத்தை ஏற்க மாட்டோம் என்றதன் மூலமும் விஜய் குறிப்பிடும் பிளவுவாத சக்திகளில் ஒன்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் நீடிக்கும், விகித்தாச்சார அடிப்படையிலான இடஒதுக்கீடு, பெரியாரை முன்னிறுத்துவது, பெண்ணுரிமை பேச்சு எல்லாமே இந்தப் ‘பிளவுவாத’ சக்திகளுக்கு கசப்பாகத்தான் இருக்கும்.
மாநாட்டின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது, அதில், தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்பதை தவிர்க்காமலும், மாற்றாமலும் பாடியது, திராவிடம் என்பதையும் தமிழ்த் தேசியம் என்பதையும் பிரித்துப் பார்க்கவில்லை என்றும் இரண்டும் ஒன்றுதான் என்றும் அறிவித்தது, சாதி-மொழி-நிலம் அடிப்படையில் பேதம் பார்க்கமாட்டோம் என்று தெரிவித்தது இவை எல்லாமே தமிழ் டி.என்.ஏ. என்ற பெயரில் பிளவுவாதம் பேசும் அரசியல் கட்சிகளுக்கு எதிரானது. பெரியாருடன், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரையும் முன்னிறுத்தி சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை குறித்த கொள்கைப் பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகள் அனைத்தும் திராவிட இயக்கங்களால் முன்மொழியப்பட்டு, அதில் பலவும் தி.மு.க. கையில் எடுத்து செயல்படுத்தி வருபவைதான். அவற்றின் அடுத்தகட்ட (2.0) வெர்ஷனாக த.வெ.க.வின் கொள்கைகள் உள்ளன.
அரசியல் எதிரி தி.மு.க, தத்துவ எதிரிகள் பா.ஜ.க.-நா.த.க. போன்றவை என்பதே விஜய் கட்சியின் பிரகடனம். புதிய- இளம் வாக்காளர்கள்+ திமுக எதிர்ப்பு வாக்காளர்கள்+ அதிமுக ஆதரவு ஓட்டுகள் வாங்குவதும், தமிழ்நாட்டில் தி.மு.க-த.வெ.க என்ற போட்டிக் களத்தை உருவாக்குவதும் விஜய்யின் திட்டமாக இருக்கலாம். முதல் மாநாடு என்பது அவரும் அரசியல் நோக்கர்களும் விரும்பியபடி அமைந்திருக்கிறது. அடுத்தடுத்த செயல்பாடுகளின் தொடர்ச்சியில்தான் த.வெ.க.வின் தாக்கத்தை உணரமுடியும். மாநாடு முடிந்தபிறகு சல்லி சல்லியான நாற்காலிகள் போல ஆகாமல் அரசியல் பயணத்தை விஜய் மேற்கொள்வாரா என்ற கேள்விக்கு த.வெ.க.வினர்தான் பதில் சொல்ல வேண்டும்