
தவெகவின் முதல் மாநில மாநாட்டு நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்தது. 10 லட்சம் பேர் இந்த மாநாட்டிற்கு வந்ததாக தவெக தரப்பு சொல்கின்றது. இந்த மாநாட்டிற்கு வந்தவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி, வெயிலில் மயக்கமடைந்து விழுந்து 37 பேர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்ட தவெக இளைஞரணி துணைத்தலைவர் கலைக்கோவன், திருச்சி தெற்கு மாவட்ட தவெக இளைஞரணி தலைவர் சீனிவாசன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் தவெக தலைவர் அவர்களுக்கு இரங்கல் எதுவும் தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாநாட்டில் நான் உழைத்தேன். ஆனால், அதற்கு உரிய அங்கீகாரம் கொடுத்தது நீங்கள்தான். நீங்களும் நானும் வேறு வேறல்ல. ஒரே குடும்பம்தான் நாம் என்று உருக்கமுடன் பேசிய விஜய், மாநாட்டிற்கு வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.
கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரு தலைவராக இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்? என்று அவர்களின் உறவினர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், விபத்தில் உயிரிழந்த தவெக நிர்வாகிகள் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விஜய் சொல்லித்தான் தான் அஞ்சலி செலுத்த வந்ததாக அவர் சொல்லியும், உயிரிழந்த நிர்வாகிகளின் குடும்பங்களை கட்சி பார்த்துக்கொள்ளும் என்று வாக்குறுதி அளித்த பின்னரும் கூட தவெக தொண்டர்கள் ஆறுதல் அடையவில்லை. கட்சித்தலைவர் விஜய் இதுவரைக்கும் இரங்கல் தெரிவிக்காமல் ஏன் மவுனம் காக்கிறார்?

மாநாட்டிற்காக வந்த தொண்டர்கள் உயிரிழந்தது தெரிந்தும் மாநாட்டில் அதுகுறித்து வருத்தம் கூட தெரிவிக்கவில்லையே, இப்போதே இப்படி இருக்கிறாரே விஜய். இதில் அவர் முதல்வர் ஆனால் என்னத்தை கிழிக்கப்போகிறார்? என்று கொந்தளிக்கின்றனர்.