முதல்வர் நாற்காலி மோகத்தில் இருக்கும் விஜய் அதற்காக எதையும் செய்யத் துணியும் நிலைக்கு வந்துவிட்டார். அவருக்கு மக்கள் நலன் குறித்தெல்லாம் அக்கறையில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இனிமேல் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று தெறித்து ஓடிக்கொண்டிருக் கிறார்கள்.
முதலாமாண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். இந்த ஓராண்டில் விஜய் களத்திற்கு வந்தது நான்கு முறைதான். தவெக மாநாடு, கள்ளக்கறிச்சி விவகாரத்தில் களத்திற்கு சென்றது, அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் ஆளுநர் சந்திப்பு, பரந்தூர் மக்கள் சந்திப்பு என்று நான்கு முறை மட்டுமே களத்திற்கு வந்திருக்கிறார்.
இதனால்தான் விஜய் மக்களோடு மக்களாக இல்லை. ‘ஒர்க் பிரம் ஹோம்’ அரசியல் செய்கிறார். ஒர்க் பிரம் ஹோம் விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது என்று தமிழிசை உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர்.
தான் களத்திற்கு செல்லாமலேயே தன் தொண்டர்களை மட்டும் களத்திற்கு செல்ல வேண்டும் என்று விஜய் சொன்னதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
ஆனால் தவெகவினரோ, ஒவ்வொரு தொண்டனும் தலைவர்தான். நாங்கள் செல்லும்போது இருக்கும் வரவேற்பு எங்களுக்கானது அல்ல அது தலைவருக்கானது. கமிட் ஆகியிருக்கும் திரைப்படங்களை முடிக்க வேண்டும். தொண்டர்களை அரசியல் வசப்படுத்த வேண்டும், கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று கட்சி தொடங்கும் போதே தெளிவாகச் சொன்னார். படப்பிடிப்பு விரைவில் முடியப்போகிறது. அதன் பிறகு தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை சந்திக்கப்போகிறார் என்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட சிடிஆர் நிர்மல்குமார் பாஜகவில் பணியாற்றிவிட்டு அங்கிருந்து அதிமுக சென்று இப்போது தவெகவுக்கு வந்திருக்கிறார். காரில் இருந்து இறங்கி வந்ததுமே அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கிடைக்கிறது. பணபலம் வைத்துக்கொண்டு திமுகவின் சீட் கிடைக்காததால் அக்கட்சிக்கு எதிராக விசிகவில் இணைந்து அங்கேயும் இருக்க முடியாமல் வந்தவருக்கு தவெகவில் துணை பொதுச்செயலாளர் பதவி கிடைக்கிறது.
ஏற்கனவே ஜான் ஆரோக்கியசாமியை வைத்துக்கொண்டு கார்ப்பரேட் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய். ஜான் தயார் செய்துகொடுக்கும் அறிக்கைகளை வெளியிடுவது ஒன்றே மக்கள் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் விஜய். பரந்தூர் மக்களை சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்த விஜய் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு விவசாயிகளை ஏன் சென்று சந்தித்து ஆதரவு தெரிவிக்கவில்லை? அதை ஜான் சொல்லவில்லை. அவர் சொல்லி இருந்தால் அரிட்டாபட்டி சென்றிருப்பார் விஜய்.
மக்கள் நலன் பற்றி எல்லாம் கார்ப்பரேட்களுக்கு அக்கறை இருக்காது. அதே மாதிரிதான் பதவிக்காக மக்கள் நலன் அல்லாத கார்ப்பரேட் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய். ஏற்கனவே இப்படி கார்ப்பரேட் அரசியல் செய்து கொண்டிருக்கையில் மேலும் ஆதவ் அர்ஜூனா மாதிரியான ஆட்களை சேர்த்துக்கொண்டு இன்னமும் கார்ப்பரேட் அரசியலை மேம்படுத்தப்போகிறார்.
முதல்வர் நாற்காலி மோகத்தில் எதையும் செய்யத் துணிந்தவராக இருக்கிறார் விஜய். அவருக்கு மக்களைப்பற்றி எல்லாம் கவலையில்லை. அவர் மக்கள் அரசியல் பேசவே மாட்டார். அதனால் அவருக்கு இனியும் முட்டுக்கொடுக்க முடியாது. விஜய்க்கு இனி ஆதரவாக பேச மாட்டேன் என்று பத்திரிகையாளர் அய்யநாதன் உள்ளிட்ட பலரும் உறுதியாகச் சொல்கின்றனர்.
இத்தனை சர்ச்சைகளுக்கு இடையில் விஜய் எதை நோக்கி பயணிக்கிறார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதுகுறித்த கேள்விக்கு, ‘’விஜய் எதை நோக்கி பயணிக்கிறார் என தெரியவில்லை’’ என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
ஓபிஎஸ் சொன்னதுதான் தவெகவினரின் குழப்பமனதாக உள்ளது என்கிறது பனையூர் வட்டாரம்.