அரசியல் என்பது சினிமா மாதிரி ஸ்கிரிப்ட் அல்ல, அது முழு நேர பொறுப்பு என்பதை விஜய் உணரவேண்டும். அவர் இன்னும் அரசியல்வாதியாக பக்குவப்படவில்லை என்று தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும், இலங்கை பொதுஜன பெரமுன தலைவரும், இலங்கை எம்.பியுமான நாமல் ராஜபக்சே.
2024ம் ஆண்டில் தவெகவை தொடங்கிய விஜய் இதுவரையிலும் எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. சமூக பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் அவர் குரல் கொடுக்கவில்லை. சினிமாவில் வசனம் பேசுவது மாதிரி அவ்வப்போது மேடையில் தோன்றி டயலாக் பேசிவிட்டு சென்றுவிடுகிறார். அவர் எப்போது முழு நேர அரசியல்வாதியாக மாறப்போகிறார்? என்ற விமர்சனம் இருந்து வரும் நிலையில், நாமல் ராஜபக்சே இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியிலும் இது எதிரோலிக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியாவிலும் விஜய்க்கு இருந்த வரவேற்பினைப்பார்த்து நாமல் ராஜபக்சே தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார். இலங்கையிலும் விஜய்க்கு ரசிகர்கள் இருப்பதை உணர்ந்தும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
’’எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது திரையுலக வாழ்க்கையை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அவருக்கு எல்லை கடந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அவர் அரசியல்வாதி என்பதை விட நடிகராகத்தான் எனக்கு பிடிக்கும். ஏனென்றால் அவர் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை.
அவருக்கு வயது, திறமை, நேரம் இருக்கிறது. ஒரு அரசியல்வாதியாக எப்படி அவரது பயணம் செல்கிறது என்பது போகப்போகத் தெரியும்.

அரசியல் என்பது சினிமா மாதிரி ஸ்கிரிப்ட் அல்ல. அது முழு நேர வேலை என்பதை உணர்ந்து, டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தை இயக்க வேண்டும் என்று விரும்பினால் விஜய்க்கு முழுமையான கவனம் வேண்டும்.
பொதுப்பிரச்சனைகள் என்பது சினிமா மாதிரி அல்ல, அவை சிக்கலானவை. இதை உணர்ந்து விஜய் அரசியலில் தீவிரமாகச் செயல்பட வேண்டும். மக்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வாக்குறுதி அளித்து நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் விஜய்.
விஜயின் அரசியல் வருகைக்கு ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்புகளை வைத்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகளை விஜய் பூர்த்தி செய்ய வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார்.

தவெக மதுரை மாநாட்டில் பேசிய விஜய், ‘’இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழக மீனவர்களின் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வுதான் கட்சத்தீவு மீட்பு. கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்’’ என்று பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி இருந்தார். நாகப்பட்டினத்தில் நடந்த மக்கள் சந்திப்பின் போதும் கூட, இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார் விஜய்.
இது குறித்து நாமல் ராஜபக்சே, ‘’இந்த பிரச்சனை தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் அடிமட்ட இழுவை மீன்பிடித்தலும் சட்டவிரோத மீன்பிடி முறைகளும்தான் முக்கியப்பிரச்சனை. கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி. கச்சத்தீவு என்பது இந்தியா – இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம். அது பற்றிய முடிவுகள் மத்திய அரசிடம்தான் உள்ளன, மாநில அரசுகளிடம் இல்லை’’ என்று கூறி இருக்கிறார்.

’’விஜய் மட்டுமல்ல பொதுவாக தமிழக அரசியல்வாதிகள் இலங்கையை பாரம்பரிய அரசியல் உணர்வுகளின் கண்ணாடி வழியாக பார்ககாமல் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும்’’ என்றும் பேட்டியில் நாமல் ராஜபக்சே கூறி இருக்கிறார்.
