
எப்போதும் நிதானத்துடன் பேசும் செங்கோட்டையன் தலைமைக்கு எதிராக திடீரென்று வெடித்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்திருந்தார்.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, சீனியரான தன்னை உதயகுமார் விமர்சித்திருக்கிறாரே என்ற ஆத்திரத்தில் நிதானம் இழந்து, ‘’அவரு என்ன சொல்றது.. அவரு அம்மா செத்து கிடக்குறா…அத போய் பார்க்கச் சொல்லுங்க…’’ என்றார்.
செங்கோட்டையனிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று அவரது ஆதரவாளர்களே எதிர்பார்க்கவில்லை. உதயகுமார் தாய் குறித்து ஒருமையில் பேசிய செங்கோட்டையனின் பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், உடனே தனது தவறை உணர்ந்து அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

பேட்டி கொடுத்துச்சென்ற 10வது நிமிடத்திலேயே மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து, ‘’தாயை இழந்து துக்கத்தில் கண்ணீரில் மல்கிக் கொண்டிருக்கும் போது, இரங்கல் சொல்ல அவர் குடும்பத்திற்கு செல்ல முடியவில்லை. இந்த சூழ்நிலையில் அவரின் தாயின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லம் இறவனை வேண்டுகிறேன்.
தாயின் அருமை மகன்களுக்குத்தான் தெரியும். தாயை இழந்து தவித்த நேரத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சொன்ன பதிலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.
கட்சியின் பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டாலும் கூட, அதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத செங்கோட்டையன் அது குறித்து பேசும் போது நா தழுதழுத்தாலும் கூட, நிதானம் இழந்து பேசவில்லை.
ஆனால் நெருக்கடியான நேரத்தில் ஊடகத்தினர் மைக்கை அவர் வாயில் கொண்டு போய் சொருகும் அளவுக்கு டார்ச்சர் செய்து, அந்த நேரத்தில் உதயகுமாரின் விமர்சனத்தைப் பற்றி கேட்டதால்தான் ஆத்திரத்தில் அப்படி நிலை தடுமாறி பேசிவிட்டார் என்கிறார்கள் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்.