தமிழ்நாடு உயர்கல்வித் துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் திறமையான மனித வளத்தை உருவாக்கி, தொழில் சார்ந்த வளர்ச்சியை நோக்கி மாநிலம் முன்னோக்கி நகர்வதாகவும் தமிழ்நாடு அரசுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
உயர் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு, தேசிய பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ஊக்குவிப்பதாகவும், யுஜிசி தலைவர் பாராட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்த தென் மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யுஜிசி தலைவர் ஜெகதேஷ்குமார், உயர்கல்வித் துறையில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்வதாக கூறினார்.
“மெட்ராஸ் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், IIT மெட்ராஸ் மற்றும் NIT திருச்சி போன்ற கல்லூரிகள் நாட்டில் சிறந்த மனித வளத்தை உற்பத்தி செய்கின்றன, அவை மாநிலத்தில் தொழில் சார்ந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கியப் பங்காற்றுகிறது”, என்று அவர் கூறினார்.
உலக அளவில் கல்வித் துறையில் பெரிய அளவிலான போட்டி நிலவுவதாகக் கூறிய ஜெகதேஷ் குமார், தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாட்டில் கல்வி முறை மேம்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உயர் கல்வியை மேம்படுத்த தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.
தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மத்தியப் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.
மண்டல அளவில் துணைவேந்தர்களுக்கான மாநாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தெற்கு மண்டலத் துணைவேந்தர்கள் கூட்டம் நேற்று (05/01/2024) நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.
Published by அசோக் முருகன்