முறைகேடு நடந்தது உறுதியானதால் நெட் தேர்வு ரத்தாகி இருக்கும் நிலையில், முறைகேடு நடந்ததாக ஆதாரங்கள் இருந்தும் நீட் தேர்வை மட்டும் ஏன் மத்திய அரசு ரத்து செய்ய தாமதம் செய்வது ஏன்? என்று எதிர்க்குரல்கள் எழுந்திருக்கின்றன.
இளங்கலை மருத்துவ படிப்புக்காக கடந்த மே 5ம் தேதி அன்று நடந்த நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் நடந்தது அம்பலமானது. அதனால் வினாத்தாள் கசிவு, கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் ஆகியவற்றை மறு தேர்வு நடத்த சொல்லி தேசிய தேர்வு முகமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டனர். கருணை அடிப்படையில் சில மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும் என்றும், அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடைபெறும் எனவும் தேசிய முகமை தெரிவித்திருந்தது.
விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த மறு தேர்னை எழுதலாம். விருப்பம் இல்லாத மாணவர்கள் அசல் மதிப்பெண்களுடன் கருணை மதிப்பெண் நீக்கம் தவிர்த்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜுன்18ம் தேதி அன்று தேசிய அளவில் இந்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசியர், இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுகியினை தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமையால் , நடந்த யுடிசி, – நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தது மத்திய அரசு.
நெட் தேர்வினை எழுதிய தேர்வர்கள் இதன் மூலம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, வினாத்தாள் கசிவு, தேர்தல் முறைகேடு போன்றவற்றால் நீட் தேர்வையும் ரத்து செய்க என்று இந்தியா கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
வரும் 24ம் தேதி அன்று நீட்டுக்கு எதிராக திமுக மாணவரணி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது.
அனைத்து மாநிலங்களிலும் நீட் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களூம் எதிர்க்க தொடங்கிவிட்டன. நீட் தேர்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணி வலியுறுத்தும் என்கிறார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.