டெல்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் உள்ள உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாம் ஆகியோருக்கு சுப்ரீம்கோர்ட் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
யார் இந்த உமர் காலித்?
உமர் காலித் (Umar Khalid), டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவருக்கு மாணவர் அரசியல் மற்றும் குடியுரிமை உரிமைகள் தொடர்பான விவாதங்களில் தீவிரமாக செயல்பட்டவர் என்ற அடையாளம் உள்ளது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் அவர் பேசிய உரைகள் மற்றும் பங்கேற்புகள் காரணமாக, தேசிய அளவில் கவனம் பெற்ற நபராக உமர் காலித் மாறினார்.
2020ல் நடந்த டெல்லி கலவரத்தின் பின்னணி
இதனைத்தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற கலவரங்கள், நாட்டையே உலுக்கிய பெரும் வன்முறை சம்பவமாக மாறியது. என்னவென்றால், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல், விரைவில் மத ரீதியான கலவரமாக மாறியது. இந்த கலவரங்களில் பலர் உயிரிழந்தனர்.மேலும் இந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் மற்றும் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் இந்திய அரசியல் மற்றும் சமூக சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
உமர் காலித் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்
டெல்லி கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீஸ், உமர் காலித் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. கலவரத்தை திட்டமிட்டு தூண்டியதாகவும், போராட்டங்களின் பெயரில் வன்முறைக்கு வழிவகுத்ததாகவும் போலீஸ் குற்றம் சாட்டியது. இதன் அடிப்படையில், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் (UAPA) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சர்ஜில் இமாமும் (Sharjeel Imam) முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

சிறையும் நீண்ட சட்டப் போராட்டமும்
கைது செய்யப்பட்டதிலிருந்து உமர் காலித் நீண்ட காலமாக சிறையில் உள்ளார். இந்த காலகட்டத்தில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் சுமத்தப்பட்டவை என்றும், கருத்து வெளிப்பாட்டின் அடிப்படையில் ஒருவரை தீவிரவாத சட்டத்தின் கீழ் கைது செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் ஆதரவாளர்கள் வாதிட்டு வருகின்றனர். மறுபுறம், அரசு தரப்பு மற்றும் போலீஸ், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடுமையான சட்ட நடவடிக்கை அவசியம் என தெரிவித்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு
டெல்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் உள்ள உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்துள்ளது. வழக்கின் தீவிரம் மற்றும் குற்றச்சாட்டுகளின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், அவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் சமூக விவாதங்கள்
உமர் காலித் தொடர்பான இந்த வழக்கு, இந்தியாவில் கருத்துச் சுதந்திரம், போராட்ட உரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டங்களின் பயன்பாடு குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒருபுறம் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும் என்ற வாதம் எழுந்தாலும், மறுபுறம் அரசியல் கருத்துக்களுக்காக இளைஞர்கள் குறிவைக்கப்படுகிறார்களா என்ற கேள்வியும் சமூகத்தில் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. (Delhi Riots) 2020 டெல்லி கலவரமும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் வழக்குகளும், இந்திய ஜனநாயகத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.
