8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பது எல்லா மனிதர்களுக்கும் இயல்பானது. அது உழைக்கும் மக்களுக்கும் கட்டாயம் கிடைத்திட வேண்டும் என்பதுதான் உலகளாவிய தொழிலாளர் உரிமை. மே 1 தொழிலாளர் தினம் அதைத்தான் வலியுறுத்துகிறது. நமது அரசியல் சட்டமும் அதற்குத் துணை நிற்கிறது.
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்ட 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலும் தொழிற்சங்கங்கள் உருவாகின. தமிழ்நாட்டில் சிங்காரவேலர், திரு.வி.க. போன்றவர்கள் தொழிற்சங்கங்களை கட்டமைப்பதில் முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள். 20ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் உலகளாவிய முதலாளித்துவமும், உலகளாவிய தொழிலாளர் உரிமைகளும் உலகமயம்-தாராளமயம் போன்ற கொள்கைகளால் முற்றிலுமாக மாற்றம் பெற்றன. இந்தியாவில் 1991ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இங்குள்ள தொழிற்சங்கங்களின் நிலைமையும் மாறின.
பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள்தான் இன்று உலக நாடுகளின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகப் பார்க்கப்படுகின்றன. உடலுழைப்புத் தொழிலாளர்களுடன் அறிவுசார் தொழில்களில் ஈடுபடும் ஊழியர்களும் அதிகமாகியிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலேயே பொருளாதாரக் கொள்கைகள் மாற்றம் பெற்றுள்ள நிலையில், தொழிலாளர் உரிமை சார்ந்த போராட்டங்கள் முன்புபோல ‘பூர்ஷ்வா எதிர்ப்பு’ என்ற கோணத்தில் மட்டும் பார்க்கப்படுவதில்லை. முதலாளிக்கும் தொழிலாளர்களுக்குமான Win:Win situation எனப்படும் இருதரப்புக்குமான பயன்களே வெற்றிகரமானத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர் போராட்டம் தொடர்ந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலான சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் அதனை முனைப்பாக முன்னெடுத்து, தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் போராடும் நிலை உருவானது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தொடங்கி பலரும் நேரடியாகக் களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அதை ஊக்கப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியவர்களாக இருக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. அதுவும் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியில் கூட்டணியில் உள்ள கட்சியும் அதன் எம்.பி.யும் சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில் சுமூகமான தீர்வு காண முடியும் என்றே தொழிலாளர்களின் குடும்பத்தினர் கருதுகின்றனர். போராட்டம் நீடிப்பதையோ, பணியிழப்பு ஏற்படுவதையோ எந்தக் குடும்பத்தினரும் விரும்பவில்லை.
மற்ற எலெக்ட்ரானிக் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களைவிட தனது நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கான மாத சம்பளம் 1.8 மடங்கு கூடுதல் என்கிறது சாம்சங் நிறுவனம். கூடுதல் நேர உழைப்புக்கான ஊதியம், பணிக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதி, வேலை நேரத்தில் உணவு ஆகியவை செய்து தரப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது. மருத்துவக் காப்பீடு, தீபாவளி பரிசு, திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளுகக்னப் பரிசுகள் தரப்படுவதாகவும் தெரிவிக்கிறது. மொத்த பணியாளர்களில் நிரந்தரப் பணியாளர்களே அதிகம் என்றும், பணியாளர்களின் சராசரி பதவிக்காலம் 10 ஆண்டுகள் என்ற அளவில் உள்ளது என்றும், இத்தகைய பணி அனுபவம் கொண்டவர்கள் மாதம் 40ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர் என்றும் தெரிவிக்கிறது சாம்சங் நிறுவனம். இந்த விவரங்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் போராட்டத்தின் நோக்கம் சுமூக முடிவு காண்பதாக இருக்க வேண்டும். வீணாக நீட்டித்துக் கொண்டு போவதோ, தொழிற்சங்கத்தின் வாயிலாக கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்த நினைப்பதோ மக்கள் நலனுக்கு ஏற்றதாக இருக்காது.
இடதுசாரி ஆட்சிகள் பல முறை அமைந்த மாநிலம் கேரளா. இப்போதும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி உள்ள ஒரே மாநிலமும் அதுதான். அந்த மாநிலத்தில் இதுவரை அமைந்துள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கையையும், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இன்று நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் என்ற பெருமையைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் இடம்பெற்ற கூட்டணியின் மூலம் தனிப்பெரும்பான்மை அரசு அமைத்த தி.மு.க.வின் மூன்றாண்டுகால ஆட்சியில் முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் பெருகி வரும் நிலையில், தொழிலாளர்கள் நலனையும் மாநில வளர்ச்சியும் இணைத்துப் பார்த்து இடதுசாரி கட்சியினரும் தொழிற்சங்கத்தினரும் செயல்படுவது தமிழ்நாட்டிற்கு நன்மையாக அமையும்.