நிதி பற்றாக்குறையினால் அக்டோபர் மாதத்துடன் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகம் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. இதை காக்க தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் கடந்த 1963ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது தமிழ்க்கல்வித்துறை. சர்வதேச அளவிலான பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதினால் கடந்த 2014ம் ஆண்டு முதல் நிதிப்பற்றாக்குறையை சந்தித்தது கொலோன் பல்கலைக்கழகம். இதன் காரணமாக 2 முறை தமிழ்த்துறை மூடப்படும் அபாயம் நேர்ந்தது.
கடந்த 2018ல் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அளித்த 1.5 கோடி ரூபாய் நிதியினாலும், ஐரோப்பிய தமிழர் கூட்டமைப்பு அளித்த 20 லட்சம் ரூபாய் நிதியினாலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதத்தில் அளித்த 1.24 லட்சம் நிதியினாலும் இந்த நிலை தடுக்கப்பட்டது. இந்த நிதி எல்லாம் தீர்ந்து விட்டதால் மீண்டும் மூடப்படும் அபாயம் உள்ளது.
தற்போது கொலோன் தமிழ்த்துறையில் ஒரே ஒரு உதவிப்பேராசிரியர் மட்டுமே உள்ளார். அவருடைய ஒப்பந்த காலமும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. அவருக்கு பிறகு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் அக்டோபர் மாதத்துடன் கொலோன் தமிழ்த்துறை இழுத்து மூடப்படும் சூழலில் உள்ளது.
மூடப்பட்டுவிட்டால் மீண்டும் திறப்பது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணந்து இந்த நிலைமையை சரி செய்யுமாறு மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கைகள் வலுக்கின்றன.