அமெரிக்காவில் வாழும் தமிழர்களை இன்று (செப்டம்பர் 7) சிகாகோ நகரில் சந்தித்து உரையாற்றுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.
53 ஆண்டுகளுக்கு முன்
1971ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அரங்கில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் உரையாற்றினர். அந்த உரையிலிருந்து சில பகுதிகள்:
“விவேகானந்தரின் பொன்மொழிகள் எதிரொலித்த நகரம் இந்த எழில்மிகு சிகாகோ நகரமாகும்.
அந்தப் பெருமைக்குரிய மனிதர் பிறந்த நாட்டிலிருந்து, அமைதி வழியில் விடுதலைப் போர் நடத்தி வெற்றிகண்ட காந்தியடிகள் தோன்றிய நாட்டிலிருந்து, இருள் மிகுந்திருந்த தென்பகுதியில் பகுத்தறிவு ஒளி பரப்பிய பெரியார் ராமசாமியும், அரசியலில் புதுவழி வகுத்த அறிஞர் அண்ணாவும் தோன்றிய நிலப்பரப்பி லிருந்து ஒரு பெரிய மக்கள் இயக்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் உங்களையெல்லாம் இந்த அரசியல் கருத்தரங்கில் சந்திக்கிறேன்.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று எச்சரிக்கை விடுத்த சிலப்பதிகாரம் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் ஆண்ட நாடுகளின் அரசியல் சிறப்பை இன்னமும் விளக்கிக் கொண்டிருக்கிறது.
அரசியலுக்கென ஒரு தனி அதிகாரமே வகுத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் நெறி கண்ட வள்ளுவரின் திருக்குறள் மணம் கமழும் நாடு நான் பிறந்த தமிழ்நாடு.
அந்தப் புகழ்மிக்க மாநிலத்தின் நான்கு கோடி மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் இருபது ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த ஒரு பெரிய கட்சியை ஜனநாயகப் போர்க் களத்தில் சந்தித்து ஆட்சி மாற்றத்தைச் செய்த சரித்திரம் என்னுடைய கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உண்டு.
அடிமை விலங்கொடிந்து ஆனந்த சுதந்திரம் வந்த பிறகும், எதிர்பார்த்த ஒளிமிகு வாழ்வு எங்கள் மக்களுக்குக் கிட்டவில்லை. இந்திய நாடு அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு என்பதை மறந்து விட முடியாது.
ஆறு பிரேசில் நாடுகள் – ஒன்பது எகிப்துகள்-15 நைஜீரியாக்கள் – கிட்டத்தட்ட மூன்று அமெரிக்க நாடுகள்- இந்த மக்கள் தொகையைக் கொண்டது இந்திய நாடு. அதற்காக மக்கள் தொகைக் கணக்கையும், அதன் சுமையையும் கூறிக்கொண்டே பொறுப்புகளைத் தட்டிக் கழித்து விடவும் கூடாது.
எல்லாம் அவனவன் தலையில் எழுதியபடிதான் நடக்குமென்று ஏமாற்றுகிறவன் கூற – அதனை ஏமாற்றப்பட்டவனும் ஏற்றுக்கொண்டிருந்த காலத்தை மாற்றி அந்தத் தலையெழுத்தைத் திருப்பி எழுத நாங்கள் எழுதுகோல் பிடித்திருக்கிறோம். அதில் இந்தியாவில் இப்போது தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறதென்றால் எங்கள் கட்சி மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கிற அரசியல் விழிப்புதான் காரணம்.
சாதாரண மக்களுக்குத் தொண்டு செய்திட அந்தஸ்து மிக்க குடும்பத்தினர்தான் பதவிப் பொறுப்புகள் ஏற்க வேண்டுமென்றிருந்த ஐதீகத்தை அறவே மாற்றி, சாமான்ய மக்களுக்குத் தொண்டாற்ற சாமான்ய மக்களின் மத்தியிலிருந்தே தலைவர்களைத் தோன்றச் செய்த பெருமை எங்கள் அரசியல் கட்சியின் அஸ்திவாரமாக அமைந்த சுயமரியாதை இயக்கத்திற்கு உண்டு.
பெரியாரின் சுயமரியாதை இயக்கம் எங்கள் நாட்டு மனிதனின் கண்களைத் திறந்தது.
அண்ணாவின் அரசியல் ஈடுபாடு அந்த மனிதனுக்கு ஜனநாயக உணர்வுகளைத் தெளிவுபடுத்தியது.
நீங்கள் எங்கள் இயக்க வளர்ச்சியைப்பற்றியும் இந்தப் பல்கலைக் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கிற கழகத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காண நான் மகிழ்கிறேன்.
அரசாங்கத்தின் அச்சாணி சட்டசபையிலோ, நாடாளுமன்றத்திலோ இருக்கிறது என்று அடையாளத்திற்காகச் சொன்னாலும் உண்மையிலேயே மக்கள் மத்தியில்தான் அந்த அச்சாணி இருக்கிறது. அவர்கள்தான் எங்களைத் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக மாற்றியிருக்கிறார்கள். தன் கையில் தரப்படும் வாக்குச் சீட்டின் வலிமையை ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்து இருக்கிறான்.
நாங்கள் போற்றிவரும். அரசியல் பண்பாடு நீண்ட காலமாகவே ஆளுக்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே உள்ள ‘பலகை’யின் அகலத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது.
நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாலைந்து ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும், பின் தங்கிய மக்கள் நலனுக்கும் திட்டங்கள் வகுத்துச் செயல் படுகிறோம்.
பட்டிதொட்டியெல்லாம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங் கிடவும், மின்வசதி பெருக்கிடவும் தீவிரமாகச் செயல்படுகிறோம். பிச்சைக்காரர் மறுவாழ்வுக்கு நாங்கள் எடுத்துள்ள முயற்சி வேகமாக நடைபெறுகிறது. குடிசைகளை மாற்றி நல்ல வீடுகளைக் கட்டித் தருகிறோம். குடியிருப்பு மனைகள் சொந்தமில்லாமல் இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு அவைகளைச் சொந்தமாக்க சட்டம் செய்துள்ளோம். நிலமற்ற ஏழை எளியோர் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு நிலப்பட்டாக்கள் வழங்கியுள் ளோம். இலக்கியப் புகழும், வரலாற்றுப் புகழுமிக்க தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறோம்.
இவைகளால் எல்லாம் நாங்கள் திருப்தி அடைந்து விட்டோமா என்றால் இல்லை, நேரு, ஒருமுறை கூறியது போல் கடைசியாக ஒரு ஏழையின் கண்ணீர் துடைக்கப்படும் வரையில் எங்கள் பணி முடிந்ததாக அர்த்தமில்லை.
மிகப் பெரிய இந்திய நாட்டில் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்களுக்கும் நல்வாழ்வு பெருகி, மாநிலங்கள் வளர்ச்சி பெறவெண்டுமானால், மத்திய அரசு குவிந்துள்ள அதிகாரங்கள், மாநிலங்களுக்குப் பரவலாக்கப்பட வேண்டுமென்று மாநில சுயாட்சிக் குரலை தி.மு.க. எழுப்புகிறது. ஜனநாயக நாட்டில் இதனைப் பேசித் தீர்த்துக்
கொள்வது இயலாத காரியமல்ல.
இப்போது இந்தியாவில் இதனை வலியுறுத்திப் பேச நிலைமைகள் சரியில்லை.
உலகம் யந்திரமயமாகிக் கொண்டு வருகிறது. உள்ளங்களும் இந்திரங்களாகிவிட்டால் பிறகு உருகி அழுகின்ற கண்களையும், உவகையால் சிரிக்கின்ற உதடுகளையும் காண முடியாது.
அந்த நிலைமை ஏற்படாமலிருக்க மனிதாபிமான உணர்வுடன் எதனையும் அணுகும் அன்பு வழி ஜனநாயக அரசியல் வளர்க்கப்பட வேண்டும்.
- இந்த சொற்பொழிவைத் தொடர்ந்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் கருத்தரங்கிற்கு வந்தவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார் முத்தமிழறிஞர் கலைஞர். பல்கலைக்கழகப் பேராசிரியர் ருடால்ப் சிறப்பு விருந்து அளித்தார்.
பங்களாதேஷ் நாடு சுதந்திரத்திற்காக போராடிய நிலையில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையோரத்தில் கடுமையான போர் நிலவிய சூழலில் அமெரிக்காவில் கலைஞர் ஆற்றிய இந்த உரையும், இந்திய எல்லையோரத்தில் அமைதி ஏற்பட அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகள் முன்வர வேண்டும் என்ற அவரது கோரிக்கையும் பலத்த வரவேற்பைப் பெற்றன.
சுவாமி விவேகானந்தர் தொடங்கி சிகாகோவில் ஒலிக்கின்ற இந்திய குரல்கள் உலக அரங்கை ஈர்க்கத் தவறியதில்லை.