அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்க எல்லையை விரிவுபடுத்தும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
டென்மார்க் நாட்டின் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து வருவது முதல் பனாமா கால்வாயை மீட்டெடுப்பேன் என அச்சுறுத்துவது வரை, நவீன அமெரிக்க விரிவாக்க கொள்கையை டொனால்ட் டிரம்ப் கட்டி எழுப்புகிறாரோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற வேண்டும் என அழைப்பு விடுக்கும் டொனால்ட் டிரம்ப்பின் இந்த செயல், 19-ம் நூற்றாண்டில் அமெரிக்கர்களின் ‘Manifest Destiny’ என்ற விரிவாக்கக் கோட்பாட்டை நினைவூட்டும் வகையில் உள்ளது.
டிரம்ப்பின் இந்தக் கருத்துக்களில் சில வெறும் தூண்டுதல்களாகத் தோன்றினாலும், மற்றவை அமெரிக்காவின் மூலோபாய நன்மைகள் அடங்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது.
டிரம்ப் ஏன் கிரீன்லாந்தை ‘வாங்க’ விரும்புகிறார்?
கிரீன்லாந்து மீதான டிரம்பின் ஆர்வம் புதிதல்ல. கடந்த 2019-ல் தனது முதல் அதிபர் பதவிக் காலத்திலேயே, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியாக விளங்கும் கிரீன்லாந்தை வாங்கும் யோசனையை முன்வைத்து இருந்தார்.
கிரீன்லாந்தின் மூலோபாய இருப்பிடம் மற்றும் இயற்கை வளங்களைக் காரணம் காட்டி, டிரம்ப் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
அந்த நேரத்தில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் டிரம்ப்பின் ஆலோசனை “அபத்தமானது” என்று கூறி நிராகரித்தார்.
இந்த சூழலில், கடந்த வாரம் தனது Truth Social சமூக ஊடக கணக்கில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக, கிரீன்லாந்தின் உரிமையும், அதன் கட்டுப்பாடும் அமெரிக்காவுக்கு அவசியம் தேவை” என டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள கிரீன்லாந்தின் பிரதமர் Múte Egede, “கிரீன்லாந்து எங்களுடையது; நாங்கள் விற்பனைக்கு இல்லை, ஒருபோதும் விற்பனைக்கு வரமாட்டோம்” என கூறியுள்ளார்.
பனாமா கால்வாய்
அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் முக்கியமான கப்பல் பாதையான பனாமா கால்வாய், டிரம்பின் மற்றொரு இலக்காக மாறியுள்ளது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவால் கட்டப்பட்ட இந்த கால்வாய், 1999-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர் ஒரு ஒப்பந்தத்தின் கீழ் பனாமாவிடம் ஒப்படைத்தார்.
அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் நகரில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், அமெரிக்க கப்பல்கள் மீது பனாமா விதித்துள்ள கட்டணங்கள் “மிகவும் நியாயமற்ற ஒன்று” என தெரிவித்ததோடு, அந்த கால்வாயை மீட்டெடுக்கும் கருத்தையும் முன்வைத்தார்.
மேலும், “பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் முழுமையாகவும், விரைவாகவும் எந்த கேள்விக்கும் இடமின்றியும் திரும்ப வழங்க வேண்டும்,” என்றும் டிரம்ப் பகிரங்கமாக அறிவித்தார். தார்மீக அடிப்படையில் பனாமா இதை செய்ய வேண்டும் அல்லது பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.
டிரம்ப்புக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த பனாமாவின் ஜனாதிபதி ஜோஸ் ரவுல் முலினோ, “பனாமா கால்வாயின் ஒவ்வொரு சதுர மீட்டரும் அதன் அருகில் உள்ள பகுதியும் பனாமாவிற்கு சொந்தமானது,” என்று கூறியுள்ளார்.
பனாமா கால்வாய் மீது சீனா செல்வாக்கு செலுத்துவதாக எழுப்பப்பட்ட டிரம்பின் குற்றச்சாட்டுகளையும் பனாமா ஜனாதிபதி முலினோ முற்றிலும் நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவின் 51-வது மாநிலம் கனடா?
கனடாவைப் பற்றிய டிரம்பின் கருத்துக்கள் கிண்டலாக தோன்றினாலும் அதுவும் கவனத்தை ஈர்த்துள்ளன.
அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுத்தது முதல் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடா இணையலாம் என தொடர்ந்து பல முறை கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ‘கவர்னர்’ என விமர்சித்ததோடு, அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடா மாற வேண்டும் என்றும் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவுடன் கனடா இணைந்தால் கனேடிய மக்களின் வரி 50%-க்கும் மேல் குறையும், தொழில்கள் இருமடங்கு பெருகும், சக்திவாய்ந்த ராணுவ பாதுகாப்பு கிடைக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆண்டுதோறும் அமெரிக்காவிடம் இருந்து 100 பில்லியன் டாலரை சுரண்டாமல் கனடாவால் வாழமுடியாது என்றால், அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடா சேரலாம்; அதன் ஆளுநராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கலாம்” என டிரம்ப் முன்பு கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
நவீன அமெரிக்க விரிவாக்க கொள்கை?
டிரம்பின் இந்த கருத்துக்கள் 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கர்களின் விரிவாக்கக் கொள்கைகளுடன், குறிப்பாக ‘Manifest Destiny’யின் கோட்பாட்டுடன் ஒப்பிடும் வகையில் உள்ளதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரம்பின் கருத்துக்கள் அவரது ஆதரவாளர்களிடம் பரவலாக எதிரொலித்துள்ளன. சமூக ஊடகங்களில் டிரம்பின் ஆதரவாளர்கள் அவரின் கருத்துக்கு ஆதரவாக பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி பரப்பி வருகின்றனர்.
டிரம்பின் இந்த கருத்துக்கள் அவரது தீவிர கொள்கைகளாக பார்க்க வேண்டுமா அல்லது அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக தெரிவிக்கப்படுகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
ega4zn