அமெரிக்காவின் சிகாகோவில் வசித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையில், ரத்தம் வடிய இந்திய அரசிடம் உதவி கேட்கும் வீடியோ வெளியாகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சையத் மசாஹிர் அலி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த மாணவர் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் இந்தியானா பல்கலைக்கழக்கத்தில் முதுநிலை படிப்பை படித்து வருவதாக கூறப்படுகிறது.
சிகாகோவில் உள்ள தனது வீடு அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த சையத் மசாஹிர் அலிக்கு உதவுமாறும், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கு அவசர விசா வழங்க வேண்டும் எனவும் குடுபத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை நான்கு இந்திய வம்சாவளி மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த செய்திகள் வெளிவந்த சூழலில், இந்தியருக்கு எதிரான இந்த தாக்குதல் இந்தியர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 16 -ம் தேதி ஹரியானாவைச் சேர்ந்த 25 வயது மாணவர் விவேக் சைனி, ஜனவரி 20-ம் தேதி 18 வயது மாணவர் அகுல் தவான், ஜனவரி 28-ம் தேதி 19 வயது மாணவர் நீல் ஆச்சார்யா, பிப்ரவரி 1-ம் தேதி 19 வயது மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் ஆகியோர் கடந்த ஒரே மாதத்தில் 4 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.