தான் பேசிய உரையை தவறாக திரித்து வெளியிட்டதாக BBC செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்டு புளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிபிசி செய்தி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு :
ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Trump) ஆற்றிய உரை தொடர்பான ஆவணப்படத்தில், பிபிசி வேண்டுமென்றே அவரது பேச்சைத் திருத்தி, வன்முறையைத் தூண்டியதாகத் தவறாகச் சித்தரித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிபிசி செய்தி நிறுவனத்திடம் இருந்து சுமார் 90,000 கோடி ரூபாய் இழப்பீடு கோரி புளோரிடா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வழக்கின் முக்கிய காரணங்கள்:
- திருத்தப்பட்ட காணொளி (Edited Clip): 2024 இல் ஒளிபரப்பப்பட்ட பிபிசியின் ‘பனோரமா’ (Panorama) ஆவணப்படத்தில், டிரம்ப் தனது ஆதரவாளர்களை “Capitol-க்குச் செல்லுமாறு” அழைப்பு விடுத்ததையும், பின்னர் “நரகத்தைப் போலப் போராடுங்கள்” (fight like hell) என்று கூறியதையும் ஒன்றாக இணைத்து, அவர் வன்முறைக்கு நேரடியாக அழைப்பு விடுத்தது போன்ற ஒரு தோற்றத்தை பிபிசி ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
- அவதூறு மற்றும் தேர்தல் தலையீடு: இந்தத் திருத்தம் “பொய்யானது, அவதூறானது மற்றும் தீங்கிழைக்கும் உள்நோக்கம் கொண்டது” என்று டிரம்ப் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு சற்று முன்பு இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதால், இது “தேர்தலில் தலையிடுவதற்கான ஒரு திமிர் முயற்சி” என்றும், இதனால் தனது நற்பெயருக்கும், நிதிக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டிருந்தார்.

பிபிசியின் நிலைப்பாடு :
- பிபிசி(BBC), காணொளியைத் திருத்தி இதுகுறித்து டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், அவதூறு வழக்குத் தொடர சட்டப்படி எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, இழப்பீடு வழங்க மறுத்துவிட்டது.
- மேலும், ஆவணப்படம் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படவில்லை, மாறாக இங்கிலாந்தில் மட்டுமே பார்க்க முடிந்தது என்பதால், அமெரிக்காவில் உள்ள டிரம்ப்பிற்கு அவதூறு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் பிபிசி தனது வாதத்தில் தெரிவித்துள்ளது.
- முன்னதாக டிரம்பின் பேச்சை எடிட் செய்து வெளியிட்டதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இந்த விவகாரம், ஊடக சுதந்திரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்த விவாதங்களை சர்வதேச அளவில் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
