அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். 2016 முதல் 2020 வரை அந்நாட்டின் அதிபராக இருந்த டிரம்ப், 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் டிரம்ப் தோல்வியடைந்தார். அந்தத் தோல்வியை ஏற்பதற்கும் அவர் பல நாட்கள் மறுத்து வந்தார். 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிட, ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்தியாவின் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் எதிர்த்துப் போட்டியிட்டார். இதில் வெற்றிக்குத் தேவையான 270 எலக்ட்ரல் காலேஜ் வாக்குகள் எனப்படும், மக்கள் வாக்குகளின் அடிப்படையிலான மாநிலங்களுக்கான எண்ணிக்கையைக் கடந்து முன்னேறி டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகப் பதவியேற்க இருக்கிறார்.
ஒருவர், இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்பது அமெரிக்க தேர்தல் விதி. தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்ற ரீகன், ஜூனியர் புஷ், கிளிண்டன், ஒபாமா போன்ற பல ஜனாதிபதிகள் இருக்கிறார்கள். ஒரு முறை வென்று அடுத்த முறை தோற்ற ஜிம்மி கார்ட்டர், சீனியர் புஷ் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஜனாதிபதியாக இருந்து தோற்று, 4 ஆண்டுகள் கழித்து அடுத்த தேர்தலில் மீண்டும் வேட்பாளராகி வெற்றி பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகளில் டிரம்ப் இரண்டாமவர். இவருக்கு முன், 1888 தேர்தலில் தோல்வியடைந்த ஜனாதிபதி க்ரோவர் க்ளீவ்லேண்ட மீண்டும் 1892 தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ளார்.
டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பெண்கள் மீதான வெறுப்பு, இனவெறி சார்ந்த பேச்சுகள், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நிலைப்பாடுகள் எனப் பலவற்றையும் பேசி அதிர வைத்தார். கமலா ஹாரிஸ் தன் பிரச்சாரத்தில் பெண்கள் உரிமை, மனித நலன், பிற நாடுகளுடனான உறவு குறித்து பிரச்சாரம் செய்தார். எனினும், அவருடைய ஜனநாயக கட்சியின் சார்பில் கடந்த முறை வென்று அதிபரான ஜோ பைடனின் நிர்வாகத்தில் அமெரிக்கா பல சிக்கல்களை சந்தித்ததையும், வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற்றம் நடப்பதை எதிர்த்தும் டிரம்ப் முன்வைத்த விமர்சனங்கள் தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இழுபறியான நிலை ஏற்படும் என்றும், கடும் போட்டி உருவாகும் என்றும் வெளிப்பட்ட கருத்துக் கணிப்புகளைத் தாண்டி, மக்கள் வாக்குகளிலும் எலக்ட்ரால் காலேஜ் முறையிலும் டிரம்ப்புக்கே சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. செனட் சபையிலும் குடியரசு கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது.
உலகின் முதிர்ச்சியான ஜனநாயகம் எனப்படும் அமெரிக்காவில் இது வரை ஒரு பெண்கூட ஜனாதிபதியானதில்லை. 1788ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் முதன் முதலில் ஒரு பெண் வேட்பாளர் போட்டியிட்டதே 2016ஆம் ஆண்டில்தான். அப்போது டிரம்ப்பை எதிர்த்து நின்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன்தான் முதல் பெண் வேட்பாளர். அதன்பிறகு, இரண்டாவது பெண் வேட்பாளர் அதே ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ். இருவரையுமே டிரம்ப் வெற்றி கண்டிருக்கிறார்.
இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஜெர்மனி, நியூசிலாந்து உள்பட பல நாடுகளிலும் ஆட்சித் தலைமைக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு உள்ள நிலையில், அமெரிக்காவில் ஏன் அது இதுவரை சாத்தியமாகவில்லை? மேற்சொன்ன நாடுகளின் ஆட்சித் தலைமை அந்தந்த நாட்டுக்குரியவை. அமெரிக்காவின் அதிபர் என்றால் அவர் அந்நாட்டின் ஆட்சித் தலைமையுடன் முப்படைகளுக்கும் தலைவராக இருந்து உலகின் எந்த நாட்டு விவகாரத்திலும் மூக்கை நுழைப்பவராக இருப்பார். யுத்தத்தைத் தொடங்குவதும் நிறுத்துவதும் அவர் கைகளில் இருக்கும். அத்தகைய அதிகாரம் கொண்ட பதவிக்கு ஒரு பெண்ணை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அமெரிக்கர்களுக்கு இல்லை என்கிறார்கள் அந்நாடடு உளவியலாளர்கள். உலகின் மிகப் பெரிய வளர்ச்சியடைந்த வளமான நாடாக அமெரிக்கா இருந்தாலும் அங்கே நிறப்பாகுபாடும், பாலின பாகுபாடும் நீடிக்கின்றன.
ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க வெள்ளை நிறத்தவர். அவர் தோற்றுப்போனதபோது தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. ஹிலாரி அது பற்றி ஒரு புத்தகமே எழுதினார். கமலா ஹாரிஸ் ஜமைக்காவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தந்தைக்கும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர். எனவே அவர் வெள்ளை அமெரிக்கரில்லை. ஆஃப்ரோ-இந்திய அமெரிக்கர். கருப்பு-பழுப்பு அமெரிக்கர். அத்துடன், அமெரிக்காவின் இரண்டு பெரிய கட்சிகளான குடியரசு கட்சியிலும் ஜனநாயக கட்சியிலும் அதனதன் வேட்பாளர்களை உட்கட்சித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களுக்கானப் போட்டியில் ஒபாமாவும் ஹிலாரி கிளிண்டனும் மோதினார்கள். இதில் பல மாநிலங்களில் ஒபாமாவுக்கே ஆதரவு அதிகமாக இருந்தது. அதனால் ஒபாமா அக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜனாதிபதியானார். 2016ல்தான் ஹிலாரிக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளராகும் வாய்ப்பு அமைந்தது. கமலா ஹாரிஸ் இந்த நடைமுறையில் வேட்பாளராக்கப்படவில்லை. ஜோ பைடனின் உடல்நிலை காரணமாக கமலாவை ஜனாதிபதி வேட்பாளராக்கினர். சொந்தக் கட்சிக்குள் அவருக்கு எந்தளவு ஆதரவு இருக்கிறது என்பதையே அறியாத நிலையில், டிரம்ப்பை எதிர்க்கும் வலிமை அவருக்கு எந்தளவு இருந்தது என்பது தெரியாமலேயே தேர்தல் களத்தில் போட்டியிட்டதால் அவருக்கான வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக அமையவில்லை.
ஜனநாயக கட்சி வழக்கமாக வெற்றி பெறும் மாநிலங்களில்கூட இந்த முறை குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப்புக்கே அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகப் பெரிய மாநிலமான கலிபோர்னியா ஜனநாயக கட்சிக்கு கைகொடுத்திருக்கிறது. அதனால்தான் கமலாவுக்கு 220+ எலக்ட்ரால் காலேஜ் வாக்குகள் கிடைத்துள்ளன. இல்லையென்றால் இன்னும் பலவீனமான தோல்வியை அடைந்திருப்பார். வழக்கமாக ஜனநாயக கட்சிக்கு வாக்களிப்பவர்களில் கருப்பின ஆண்கள்-பெண்கள், லத்தீன் அமெரிக்க ஆண்கள்-பெண்கள் ஆகியோர் தங்கள் ஆதரவை கமலாவுக்கே அதிகளவில் அளித்துள்ளனர். ஆனால், வெள்ளை அமெரிக்க ஆண்-பெண் வாக்குகள் டிரம்ப்புக்கே அதிகமாக கிடைத்துள்ளது. இந்தப் பார்வைதான் வெள்ளை மாளிகைக்குள் ஒரு பெண் ஜனாதிபதி என்ற எதிர்பார்ப்பை நிறைவேற விடாமல் தடுத்து வருகிறது.
வெள்ளை மாளிகையில் கருப்பு அமெரிக்க ஜனாதிபதி என்ற நெடுங்கனவு நிறைவேற 2008ஆம் ஆண்டுவரை காத்திருந்தது அமெரிக்கா. பெண் ஜனாதிபதி அந்த வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கான காலமும் கனியும்.