
உலக நாடுகள் பலவற்றைப் போலவே இந்தியர்களுக்கும் அமெரிக்கா என்பது கனவு தேசம். பொருளாதார வளர்ச்சியும், வலுவான நிர்வாகக் கட்டமைப்பும், வேலைவாய்ப்பும் கொண்ட அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்றுவிட்டால் தலைமுறை தலைமுறைக்கும் நிம்மதியாக வாழலாம் எனக் கனவு காண்பதுடன், அதற்கேற்ப படித்து-உழைத்து-தகுதியினை வளர்த்துக்கொண்டு அமெரிக்காவில் ‘செட்டில்’ ஆக விரும்புகிற இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே இருக்கிறது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் அதிகாலை நேரத்திலேயே நீண்ட வரிசையில் ஆண்களும் பெண்களும் காத்திருப்பதைப் பார்க்கும்போதே இந்தியர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவின் வளர்ச்சியும் பொருளாதாரமும் இந்தியா உள்ளிட்ட பல நாட்டவர்களை ஈர்த்து, அவர்கள் அந்த நாட்டில் வேலைக்கு சென்று, குடியுரிமைப் பெற்றுவரும் நிலையில், இந்த வளமும் வளர்ச்சியும் எங்களுக்கானது என்கிற அமெரிக்க அரசியல் குரல்கள் அதிகரிக்கத் தொடங்கின. வெளிநாடுகளிலிருந்து முறைப்படி குடியேறுபவர்கள், சட்டவிரோதமாக குடியேறுபவர்கள், அண்டை நாடான மெக்சிகோவிலிருந்து எல்லை தாண்டி வருபவர்கள் ஆகியோரால் தங்கள் நலன் பாதிக்கப்படுவாக அமெரிக்கர்கள் கருதுவதை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் உள்ள பிறநாட்டவர்களை வெளியேற்றுவது குறித்து தேர்தல் பரப்புரைகளில் முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார். அதுவே அவரை மீண்டும் ஜனாதிபதியாகும் அளவுக்கு வெற்றியைக் கொடுத்தது.
பதவியேற்பதற்கு முன்பாகவே, அமெரிக்காவில் உள்ள பிறநாட்டவர்கள், உரிய அனுமதியின்றி குடியேறியவர்கள் குறித்து பேச ஆரம்பித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் அதை உடனே நடைமுறைக்கும் கொண்டு வந்துவிட்டார். 145 நாடுகளைச் சேர்ந்த அனுமதியின்றி அமெரிக்காவில் இருப்பவர்களை வெளியேற்றும் வேலையை அமெரிக்க அரசு தொடங்கிவிட்டது. இதில் முதல்கட்டமாக, இந்தியாவைச் சேர்ந்த 104 பேர் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
குஜராத், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களான இவர்கள் அமெரிக்காவின் ராணுவ சரக்கு விமானத்தில், கைவிலங்குடன் ஏற்றப்பட்டு, இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியை இந்திய பிரதமர் விரைவில் சந்திக்கவுள்ள நிலையில், இந்தியர்களை அமெரிக்கா வெளியேற்றத் தொடங்கியிருப்பது இருநாடுகளுக்கான உறவுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியாவின் பிரதமராக மோடி பொறுப்பேற்றபோது, அமெரிக்காவுக்கு ஆர்வமாக சென்றுகொண்டிருக்கும் இந்தியர்கள் இனி இந்திய விசாவுக்காக வரிசையில் நிற்பார்கள் என பா.ஜ.க.வினரால் பரப்பப்பட்டது. அதாவது, மோடி அரசால் இந்தியா அடையும் வளர்ச்சியைப் பார்த்து, “இனி அமெரிக்கா வேண்டாம். இந்தியாவிலேயே இருக்கிறோம்” என்று அவர்கள் திரும்பி வருவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், ஆர்வமாக யாரும் திரும்பி வரவில்லை. கட்டாயத்தின் பேரில், கைவிலங்குடன் திரும்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எந்தவொரு நாடும் தங்கள் நாட்டில் உரிய ஆவணங்களின்றியும், அனுமதி பெறாமலும் பிற நாட்டவர்களைத் தங்க வைப்பதில்லை. இந்தியாவின் நிலையும் அதுதான். அதுபோலவே, அமெரிக்காவும் இந்தியர்களை மட்டுமின்றி, அனுமதியில்லாமல் தங்கியிருக்கும் மற்ற நாட்டவர்களையும் வெளியேற்றுகிறது.
அமெரிக்காவில் ஜனநாயகம் முதிர்ச்சியடைந்திருந்தாலும், மாகாணங்களுக்கான சட்ட உரிமைகள் வலிமையாக இருந்தாலும், மனித உரிமை குறித்த சர்ச்சைகள் எப்போதும் நீடிக்கின்றன. விமான நிலையங்களில் நடைபெறும் உடல் சோதனைகள் முதல், சிறைகளில் கைதிகள் நடத்தப்படும் முறை வரை இது உலகாளவிய மனித உரிமை செயல்பாட்டாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் அப்துல்கலாம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற மதிப்புமிக்கவர்களும்கூட அமெரிக்க விமானநிலையத்தின் உடல்-உடை பரிசோதனைகளுக்குத் தப்ப முடியவில்லை. நவீனத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் காலத்திலும் அமெரிக்க விமானநிலையங்களில் ஆடைகளைக் களைந்து உடல் பரிசோதனை செய்யும் வழக்கம் ஏன் என்ற கேள்வி எழுந்தது.
அதுபோலவே, கைவிலங்கிடும் வழக்கமும் அமெரிக்காவில் தொடர்கிறது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் எந்த நாட்டவராக இருந்தாலும் அவர்களை கைவிலங்கிட்டு ராணுவ சரக்கு விமானத்தில் அனுப்பி வைக்கிறது அமெரிக்கா. இந்தியர்களுக்கும் அதே அளவுகோல்தான். சரக்கு விமானம் என்பது பயணிகள் வசதியாக வருவதற்கு ஏற்றதாக இருக்காது. கழிப்பிட வசதிகளும்கூட போதுமானதாக இருக்காது. இத்தகைய விமானத்தில் பல மணிநேரம் பயணித்து வருவதே சிறைவாசம் போலத்தான். ஆனால், அமெரிக்க நாட்டின் இந்த விதிமுறையை இந்தியாவால் கேள்வி கேட்க முடியாது என்பதே உண்மை நிலை.
அமெரிக்கா-இந்தியா உறவு என்பது இன்றைய புவி அரசியலில் சீனாவை எதிர்கொள்ளும் உத்தியாக உள்ளது. அது தனிப்பட்ட இந்தியர்களின் நலனுக்கு இப்போதைக்கு எந்த விதத்திலும் பயன்படப்போவதில்லை.