அமெரிக்க மாநிலமான அலபாமாவில் நைட்ரஜன் வாயுவை கொண்டு கைதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.
கெனத் ஸ்மித் என்பவர் 1988ஆம் ஆண்டு கூலிப் பணத்துக்காக கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. நைட்ரஜன் வாயுவைக் கொண்டு கடந்த 25-ம் தேதி அலபாமா மாநில அரசு அவரின் மரண தண்டனையை நிறைவேற்றி கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.
இதை கடுமையாக கண்டித்துள்ள ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர், இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது கொடுமைப் படுத்துவதற்கு சமம் என்று கண்டித்துள்ளார்.
Nitrogen Hypoxia என்று கூறப்படும் இந்த மரண தண்டனை முறை, இன்னும் சோதனைக் கட்டத்திலேயே உள்ள நிலையில், உலகில் முதல் முறையாக அமெரிக்காவில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
Nitrogen Hypoxia (நைட்ரஜன் ஹைபோக்ஸியா)
நைட்ரஜன் ஹைபோக்ஸியா என்பது உடலில் இருந்து ஆக்ஸிஜனை அகற்றி, நைட்ரஜன் வாயுவை உள்ளிழுப்பதன் மூலம் மரணத்தைத் தூண்டும் ஒரு முறையாகும்.
இந்த செயல்பாட்டில், ஒரு நபர் அதிக நைட்ரஜனைக் கொண்ட வாயுவை குழாய் மூலம் சுவாசிக்க வைக்கப்படுவார். முகம் முழுவதும் மறைக்கும் வகையில் மிகவும் இறுக்கமான மாஸ்க் அணிய செய்து இந்த முறை செயல்படுத்தப் படுகிறது.
இது ‘ஹைபோக்ஸியா’ என்கிற நிலைக்கு வழிவகுக்கிறது. கார்பன் மோனாக்சைடு வாயு போல, நைட்ரஜன் நச்சுத் தன்மை இலாத வாயு என்பதால் உடலுடன் வேதியியல் ரீதியாக செயல்படாது.
Nitrogen Hypoxia இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் அளவை படிப்படியாகக் குறைக்கும் என்றாலும் இதனால் மூச்சுத் திணறல் ஏற்படாது என கூறப்படுகிறது. ஹைபோக்ஸியாவின் தாக்கம் குறிப்பாக மூளை மற்றும் இதயத்தை முதலில் பாதிக்கும்.
மூச்சுத்திணறல் நிலைக்கு செல்வதற்கு முன் சுயநினைவை இழக்க செய்து, பிறகு மரணத்திற்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. இந்த தண்டனை முறை குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது.
வழக்கமான மரணத்தண்டனை முறைகளை விட இந்த மரணத் தண்டனை முறை மிகவும் மனிதாபிமான வழியாக கூறப்பட்டாலும், பெரிதாக சோதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.