உத்தரபிரதேசத்தில் இறுதி சடங்கின்போது பரிமாறப்பட்ட தயிர் பச்சடி சாப்பிட்ட 200 பேர் ரேபிஸ் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்தில் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதிச்சடங்கில் நடந்த சோகம் !
உத்தரப் பிரதேசத்தின் (Uttar Pradesh) புடான் மாவட்டத்தில் உள்ள பிப்ரௌலி கிராமத்தில், டிசம்பர் 23 அன்று ஒரு இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்பொழுது, அந்த இறுதி சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவில் தயிர் பச்சடி பரிமாறப்பட்டுள்ளது.
இதன்பிறகு, தயிர் பச்சடி செய்யப் பயன்படுத்தப்பட்ட பால் கறக்கப்பட்ட மாடு, அதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருந்ததும், டிச. 26ஆம் தேதி மாடு திடீரென உயிரிழந்துவிட்டதும் தெரிய வந்தது. இதனால், அப்பகுதி மக்கள், மாடு ரேபிஸ் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் எனவே, தங்களுக்கும் ரேபிஸ் தாக்கும் (Rabies infection) என்ற அச்சத்தில் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, கிராம மக்கள் உஜ்ஹானி சமூக சுகாதார மையத்திற்குச் சென்று தடுப்பூசி செலுத்த குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில், முன்னெச்சரிக்கையாக அனைவரும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லதுதான் என்றும் ஆனால், காய்ச்சிய பாலில்தான் தயிர் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதால் ரேபிஸ் தொற்று பரவும் வாய்ப்பு குறைவு என்றும், மாடு இறப்பதற்கு முன்பு, ரேபிஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்துள்ளதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட கிராமத்தின் அரசு மருத்துவமனையில் போதிய ரேபிஸ் தடுப்பூசிகள் (Rabies vaccination) இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிந்தனர். தொடர்ந்து, கிராம மக்கள் புரளி மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தடுப்பூசி செலுத்தியவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
