மதநம்பிக்கை சார்ந்த பெருங்கூட்டங்களில் பாதுகாப்பு என்பது எப்போதுமே கேள்விக்குறியாக இருக்கிறது. 1992ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவில் ஏற்பட்ட நெருக்கடியில் 50க்கும் மேற்பட்டவர்கள் குளத்திலேயே பிணமாகக் கிடந்தார்கள். மீட்கப்பட்ட உடல்களைக் கடந்து, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கணக்கில் வராமலேயே போனது. அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெயலலிதா தனது தோழியுடன் சென்று மகாமகக் குளத்தில் தனி இட வசதியுடன் புனித நீராடினார். இருவரும் நீராடுவதற்கான ஏற்பாடுகளிலும் பாதுகாப்பிலும் போலீசாரும் மற்ற அதிகாரிகளும் அக்கறையாக இருந்ததால், பொதுமக்கள் அந்தப் பக்கம் நீராட முடியாமல் வேறுபக்கம் செல்லவேண்டியிருந்ததால், இதனால் ஏற்பட்ட நெருக்கடியில்தான் உயிர்கள் பலியாயின.
அத்திவரதர் தரிசனம், அண்மையில் ஒரு சாமியாரைப் பார்ப்பதற்காக வந்தவர்களிடம் ஏற்பட்ட நெருக்கடி இவற்றால் பலர் உயிரிழந்ததையும் மறக்க முடியாது. இந்த நிலையில்தான், உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா நடக்கிறது என்றபோதே அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்தன. காரணம், உத்தரபிரதேசத்தில் திரிவேணி சங்கமம் எனப்படும் ஆறுகள் கலக்கும் இடத்தில் நடைபெறும் புண்ணிய நீராடல்தான் கும்பமேளாவின் சிறப்பு. இதற்காக நாடு முழுவதுமிருந்தும் இலட்சக்கணக்கில் நாள்தோறும் பக்தர்கள் வருவார்கள். மாதக்கணக்கில் நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் மொத்தமாகப் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும். முந்தைய மகா கும்பமேளாக்களில் நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலிகள் நடந்துள்ளன. அதனால், தற்போதைய நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் போதுமான அளவில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கை தொடக்கத்திலிருந்தே முன்வைக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே ராமர் கோவிலை அரசியல் களமாகப் பயன்படுத்திய பா.ஜ.க.வின் மத்திய அரசும் மாநில அரசும் கும்பமேளாவையும் அரசியல் லாபக் கண்ணோட்டத்திலேயே அணுகின. இந்த அமிர்த நீராடல் சனாதனத்தின் சக்தி என்றும், இதுதான் பாரதத்தின் வலிமை என்றும் பிரதமர் மோடி-முதல்வர் யோகி படங்களுடன் பல மொழிகளிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஆதித்யநாத் யோகியின் நிர்வாகத்தில் ஆன்லைன் கும்பமேளா அசத்தலாக நடைபெறுவதாக ஊடகங்களில் விரிவான செய்தித் தொகுப்புகள் வெளியாயின. எனினும், மேடை சரிந்து விழுதல், நெருக்கடியில் மூச்சுத் திணறல் போன்ற செய்திகள் அன்றாடம் வெளியாகியபடியே இருந்த நிலையில்தான், ஜனவரி 29 அன்று 30க்கும் அதிகமானவர்கள் பலியான அந்தக் கொடூரம் நிகழ்ந்தது.
ஜனவரி 29 அன்று மவுனி அமாவாசை நாள். அந்த நாளில் திரிவேணி சங்கமத்தில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பதால் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஒரே நாளில் கோடிக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று உத்தரபிரதேச பா.ஜ.க அரசும் அதனைப் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தது. எதிர்பார்ப்பும் பெருமையும் இருந்த அளவுக்கு மக்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பல மாநிலங்களிலிருந்தும் வரும் எளிய பக்தர்களைவிட, பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த மத்திய-மாநில அமைச்சர்கள், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் நீராடிப் புண்ணியம் தேடுவதே முக்கியமானது என்ற கண்ணோட்டம் உ.பி. மாநில பா.ஜ.க. அரசுக்கு இருந்தது. அத்துடன், மாநில முதல்வரே காவி கட்டிய சாமியார் என்பதால், காவி கட்டிய சாமியார்கள், அரை நிர்வாண சாமியார்கள் ஆகியோருக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை என்பதால் மகா கும்பமேளாவிலும் அவர்களுக்கே அதிகாலை முதல் நீராட அனுமதிக்கப்பட்டது.
முதல் நாள் இரவே வெளியூர்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வந்த பக்தர்கள் அதிகாலையிலிருந்து கால் கடுக்க நின்றும், பல மணி நேரமாக அவர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த சிலரும்கூட இப்படி மணிக்கணக்காகக் காத்திருந்தனர். கடவுளாகவே இருந்தாலும் பொறுமையிழந்துவிடுவார் என்கிற போது, மனிதர்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பார்கள்? தங்களைப் புனித நீராட அனுமதிக்காமல் தடுத்து வைத்திருந்த போலீசையும், அந்தப் போலீஸ் அமைத்திருந்த தடுப்பரண்களையும் முற்றுகையிட்டுத் தள்ளியபடி, குளிக்க எத்தனித்தனர். மிகக் குறுகலான இடைவெளியில் குளிக்கச் செல்வோரும், குளித்துவிட்டு வெளியே வருவோரும் ஒருவரையொருவர் தள்ளிக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்திலும், போலீசின் கெடுபிடி குறையவில்லை.
கூடியிருந்த பெருந்திரளான பக்தர்களிடையே ஏற்பட்ட நெருக்கடியினால் பலர் கீழே விழுந்து சின்னாபின்னமாகினர். அதில் 30க்கும் மேற்பட்டோர் பலியாக, நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை என்ற தகவலும் வெளியானது. விமான சாகசம் பார்க்க வந்த 5 பேர் கடும் வெயிலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த துயரத்திற்கு தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற இங்குள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் யாரும் பிரதமரையோ உத்தரபிரதேச முதலமைச்சரையோ கும்பமேளா கொலைகளுக்காக பதவி விலகச் சொல்ல மாட்டார்கள்.
ஒருவேளை, குஜராத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் பற்றிய கேள்விக்கு, “காரில் சாலையில் பயணிக்கும்போது டயரில் சிக்கி நாய்க் குட்டி சாவதில்லையா?” என்று ஒரு முறை சொன்ன மோடி போல, “கும்பமேளாவில் இறந்தால் புண்ணியம்தானே” என்று பதில் சொன்னாலும் சொல்வார்கள்.