பெரும்பாலும் துக்க நிகழ்வுகளில் யாரும் பேசுவதில்லை. கட்டி அணைத்து, கைகைகளை இறுகப்பற்றிக்கொண்டு அதன் மூலம் ஆறுதலை உணர்த்திடுவர். அப்படி ஒன்றுதான் நிகழ்ந்திருக்கிறது ‘வாழை’ படத்திலும். அதனால்தான் இந்தப்படத்தின் வெற்றியை தன்னால் கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை என்கிறார் மாரி. வாழை படத்தின் வெற்றி வலி நிறைந்த வெற்றி என்கிறார்.
தனது சிறுவயது வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமான ‘வாழை’யில் பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். அதனால்தான் தனது வழக்கத்திற்கு மாறாக திரையுலக முக்கிய இயக்குநர்கள் பலரையும் அழைத்து இப்படத்தை பார்க்க வைத்து அவர்களின் கருத்தை கேட்டறிந்திருக்கிறார்.
பிரபல இயக்குநர்கள் பலரும் மாரியின் அழைப்பிற்கிணங்க படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இயக்குநர் பாலாவும் இப்படத்தை பார்த்திருக்கிறார்.
தனது பட விழாக்களிலேயே அதிகம் பேசாதவர் பாலா. பெரும்பாலும் ‘நன்றி’ என்று மட்டும் சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கிவிடுவார். அவர் இந்தப்படத்தை பார்த்துவிட்டு, குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் பார்த்துவிட்டு ரொம்பவே கலங்கிப்போயிருக்கிறார்.
வெறும் சினிமாவாக மட்டும் நினைக்காமல் அது மாரியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்பதால், துக்கத்தில் உடைந்த பாலா, மாரியை ஆரத்தழுவி அதன் மூலம் தனது ஆறுதலை வெளிப்படுத்தி இருக்கிறார். மாரியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டும் தனது ஆறுதலை பதித்துள்ளார். அதன் பின்னர் சில நிமிடங்கள் மாரியின் கைகளை பிடித்துக்கொண்டு தரையை வெறித்துப்பார்த்தபடியே அமர்ந்திருந்தார் பாலா. மாரியும் எங்கோ வெறித்துப்பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.
ஒரு துக்க வீட்டினையே நினைவுபடுத்தியது அந்த காட்சிகள். அந்த சந்திப்பின்போது என்ன பேசினார் பாலா என்று பலரும் கேட்க, ’’அவரும் எதுவும் பேசவில்லை. நானும் பேசவில்லை. அந்த சமயத்தில் பேசுவதற்கான சூழ்நிலையும் இல்லை. அந்த உணர்ச்சியை சொல்ல முடியவில்லை. அப்போது மட்டுமல்லா அதன் பிறகு கூட அவர் பேசவில்லை. இப்போது வரைக்கும் இரண்டு பேரும் பேசவில்லை’’ என்கிறார் மாரி செல்வராஜ்.