முதலமைச்சர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கிடைத்தும் அந்த வீட்டில் வசிக்க முடியாமல் அல்லாடுகிறது ஒரு முஸ்லீம் குடும்பம். முஸ்லீம் என்பதால்தான் குடியேற அனுமதிக்காமல் இருக்கிறார்கள் குடியிருப்பு வாசிகள். குஜராத்தில் தான் அரங்கேறியிருக்கிறது இந்த அவலம்.
குஜராத் மாநிலம் ஹர்னி பகுதியில் முதல்வர் ஆவாஸ் யோஜனா அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 462 வீடுகள் கட்டப்பட்டன. இஸ்லாம் மத பெண் ஒருவருக்கும் கடந்த 2017ம் ஆண்டில் ஒரு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி கட்டப்பட்ட வீட்டில் குடியேறலாம் என்று அந்தப்பெண் ஆர்வமாக இருந்த நிலையில் தான் தலையில் பேரிடி விழுந்தது மாதிரி இருந்திருக்கிறது, அவர் முஸ்லீம் என்பதை சுட்டிக்காட்டி அதனால் வீட்டில் குடியேறக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் .
462 குடியிருப்பு வாசிகள் வசிக்கும் இடத்தில் ஒரு முஸ்லீம்க்கு இடம் ஒதுக்கியது தவறு என்று சொல்லி, அப்பெண்ணுக்கு ஒதுக்கிய குடியிருப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று 33 குடியிருப்பு வாசிகள் மாநகராட்சி, ஆட்சியர், போலீசாருக்கு புகார் மனு அளித்துள்ளனர். இந்த ஹர்னி பகுதி இந்துக்கள் பகுதி. இதிலிருந்து சுமார் 4 கி.மீ. சுற்றளவில் முஸ்லிம்கள் யாரும் இல்லை. அப்படி இருக்கும்போது இங்கே ஒரு முஸ்லீம் வீடு இருந்தால் அது ஆபத்து. இதை மீறினால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த பெண்ணை அங்கிருந்து போகச்சொல்லி போராட்டமும் நடத்தி வருன்றனர்.
2020ம் ஆண்டிலேயே அந்த முஸ்லீம் பெண் அங்கே வீடு கட்டக்கூடாது என்று சொல்லி குஜராத் முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். கடந்த ஜுன்10ம் தேதி முதல் மீண்டும் இப்பிரச்சனையை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதெல்லாம் மத ரீதியான பாகுபாடுகள் எல்லாம் தன் மகனை பாதிக்கும் வேதனைப்பட்டு வருகிறார் அந்த முஸ்லிம் பெண்.
இந்த விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், ’’குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சியின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, பாரதீய ஜனதா கட்சி மக்களிடையே விதைத்திருக்கும் மத ரீதியான பிளவுபாட்டின் வெளிப்பாடே ஆகும்.
அக்ரகாரம், ஊர், சேரி, ஒவ்வொரு சாதிக்குமான தனித்தனி தெருக்கள் என கிராமங்கள் இருப்பிட வாரியாக பிரிந்து கிடக்கையில், இந்தியாவில் எந்த தலைவரும் சிந்திக்கக்கூட செய்யாத திட்டமாக அனைவரும் ஓரிடத்தில் வாழ சமத்துவபுரத்தை தந்து அனைத்து சமய – சமூக மக்களையும் ஒரே இடத்தில் ஒரே குடும்பமாக வாழ வைத்து சமூகநீதியையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்தி காட்டிய தலைவர் கலைஞர் தான் “சமத்துவபுரம் கண்ட சமூகநீதி நாயகர்”.
தமிழகம் சமத்துவத்தை சாத்தியப்படுத்தியிருக்கும் அதே வேளையில், குஜராத்தில் Disturbed Areas Act என்ற சட்டத்தை பயன்படுத்தி இஸ்லாமியர்கள் இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் நிலமோ, வீடோ வாங்க முடியாமல் செய்ய அனைத்து வேலைகளையும் செய்தது அன்றைய நரேந்திரமோடி தலைமையிலான குஜராத் அரசு.
தேர்தல் பிரச்சாரங்களில் மோடியின் வெறுப்பு பிரச்சாரம் வன்முறை மட்டுமல்லாது, இஸ்லாமியர்களை சமூகரீதியாக புறக்கணிக்கவும் தூண்டியதன் விளைவுதான் இன்று மக்கள் போராடும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது’’என்கிறார்.