வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு கொடுக்கின்ற உணவு தரமானதாக இல்லை என்று அவ்வப்போது பலரும் புகார் கூறி வருகின்றனர். அதிலும் சிக்கன் உணவு படு மோசமாக இருக்கிறது என்று பலரும் புகார் கூறி வருகின்றனர்.
உணவு எந்த அளவுக்கு கெட்டுப்போய் இருந்தது என்று பயணிகள் பலரும் அவ்வப்போது வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனும் அதே புகாரினை முன் வைத்துள்ளார். இவரது புகாரும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று 13.10.2024ல் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயிலில் பயணித்துள்ளார் பார்த்திபன். இரவு உணவில் வழங்கப்பட்ட சிக்கன் உணவு ரொம்ப மோசமாக இருந்துள்ளது. பார்த்திபனுடன் பயணித்த பயணிகள் பலரும் இதைக்கண்டு குமுறியிருக்கிறார்கள்.
இதனால் புகார் புத்தகத்தில் அவர்களின் மனக்குமுறலுடன் தனது மனக்குமுறலையும் சேர்த்து ’’உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர். நல்லா சுகாதாரமாக இருந்தது. ஆனால், இரவு 19.22க்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படு மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகை வாங்கிக்கொண்டும், இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம்’’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்த புகாரினை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், ’’முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில்
தந்தே உணவு தரமாக இல்லை . பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.
நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென…’’ என்ற தனக்கே உரிய ஸ்டைலில் பதிவிட்டுள்ளார்.