தொடர்ச்சியாக விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள். இந்தியாவில் முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதும், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி எல்லா மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறுகிறது என்பதும் சாதாரண மக்களுக்கே தெரிந்திருக்கும் நிலையில், விஷச்சாராய சாவுகளை முன்னிறுத்தி, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2ஆம் தேதி மகளிர் மாநாடு பெருந்திரளான கூட்டத்துடன் நடத்தப்பட்டது.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ள நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க.வை எதிர்த்து இந்த மாநாடு நடத்தப்படுவதாக விமர்சனம் எழுந்தது. ஆனால், மாநாட்டில் தி.மு.க. சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில் மதுவிலக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். இந்தியா முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்பது வி.சி.க.வின் வலியுறுத்தல். மதுவிலக்கு நடைமுறையில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை இருபத்தைந்தைக் கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் தற்போதைய நிலவரம்.
ஆட்சியில் பங்கு-அதிகாரத்தில் பங்கு என்று வி.சி.க தலைவர் பேசிய காணொளி ஒன்றும் வெளியானது. அது பழைய காணொளிதான் என்றாலும், மீண்டும் மீண்டும் வி.சி.க.வின் வலைத்தளப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டதன் மூலமாக, தி.மு.க ஆட்சியில் பங்கு கேட்கிறதா வி.சி.க என்ற விவாதம் எழுந்தது. தேர்தலில் பங்கேற்ற காலத்திலிருந்தே அதிகாரப் பங்கீட்டை வி.சி.க வலியுறுத்தி வருகிறது என்றும், இது தற்போதைய பிரச்சினை அல்ல என்றும், அதிகாரத்தில் பங்கு என்பது தங்களின் நெடுங்காலத் திட்டம் என்றும் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
மத்திய அரசின் கீழ் உள்ள விமானப் படை நடத்திய சாகச நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஏறத்தாழ 20 இலட்சம் பேர் சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட நிலையில், சாகசம் முடிந்து திரும்பும்போது 5 பேர் பலியான அவலத்தை சுட்டிக்காட்டி, மாநில அரசின் தோல்வியென்று விமர்சித்து பேட்டி அளித்தார் வி.சி.க.வின் புதிய வரவான ஆதவ் அர்ஜூன்.
பட்டியல் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது தலித் அமைப்பினர் பலர் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், வி.சி.க.வும் உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவத, பட்டியல் இன மக்களின் இடஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், தலித் ஒற்றுமையையும் சிதைக்கும் என்ற நிலைப்பாட்டை எடுத்து, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பட்டியல் இன மக்களுக்கான உள் ஒதுக்கீடு என்பது அருந்ததியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள 3% ஒதுக்கீடாகும். இதனை வி.சி.க. அப்போதும் இப்போதும் பங்கேற்றுள்ள தி.மு.க. அரசுதான் 2009ல் நிறைவேற்றியது. தற்போது, மாநில அரசுக்கு பட்டியல் இன மக்களை வகைப்படுத்தி, உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் தரக்கூடாது என்று வி.சி.க தனது நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது தி.மு.க. கூட்டணிக்குள் மட்டுமல்ல, அருந்ததியினர் சமுதாயத்தினரிடமும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக உருவான விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமுதாயத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு காரணமான சனாதனம்- வருணாசிரமம், அதனைத் தாங்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இவற்றுக்கு எதிரான வலுவான அரசியலை எடுத்து வந்த நிலையில், உள்ஒதுக்கீடு விவகாரம்-மதுவிலக்கு-அதிகாரத்தில் பங்கு- விமான சாசக பலிகளுக்கு மாநில ஆட்சியின் மீது பழி உள்ளிட்ட செயல்பாடுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் உருவாகியுள்ள புதிய மாற்றத்தின் அடையாளமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இந்தியாவில் பா.ஜ.க.வுக்கு வளைந்து கொடுக்காமலும், பா.ஜ.க.வின் மதவெறிக் கொள்கைகளை நேரடியாக எதிர்ப்பதிலும் உறுதியாக உள்ள தலித் அமைப்பு வி.சி.க.தான். தலித் அமைப்பு என்பதுடன் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஜனநாயக இயக்கமாகக் கருதப்படும் வி.சி.க.வின் அண்மைக்காலப் போக்குகள் வழக்கத்திலிருந்து மாறுபட்டவையாக உள்ளன. எதிர்வரும் 2026 தேர்தலை மனதில் வைத்து முன்னெடுக்கும் செயல்பாடுகளா? கூட்டணி மாற்றத்தை வி.சி.க விரும்புகிறதா? தற்போது மராட்டிய மாநில தேர்தலில் களம் காண்பதன் மூலம் இந்திய அளவிலான தலித் அடையாள அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கிறதா? என்பன உள்ளிட்ட கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன.
வி.சி.க.வின் இத்தகைய தொடர்ச்சியான நிலைப்பாடுகள் அரசியலில் மாற்றத்தைத் தருமா, சொந்தக் கட்சிக்கே ஏமாற்றமாக அமையுமா என்பதை அறிந்துகொள்ள சட்டமன்றத் தேர்தலை வரை அவகாசம் உள்ளது.