அட்மின்கள் சூழ் சமூக வலைத்தள உலகில் சர்ச்சைக் கருத்துகளுக்குப் பஞ்சமிருப்பதில்லை. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகாரத்தில் பங்கு என்று பேசிய காணொளி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிடப்பட்டபோது அப்படித்தான் சர்ச்சை ஏற்பட்டது. தி.மு.க. தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்கும் குறைவான இடைவெளியில் அது மீண்டும் ஒரு தேர்தல் களத்தை சந்திக்க இருக்கிற நிலையில்தான், அதிகாரத்தில் பங்கு கேட்கும் காணொளி பதிவானது.
இது பழைய காணொளி என்று திருமாவளவன் விளக்கம் அளித்த நிலையில், அந்த காணொளி நீக்கப்பட்டு, மீண்டும் பதிவாகி.. மீண்டும் நீக்கப்பட்டு.. மீண்டும் பதிவாகி.. என சர்ச்சைகளுக்கு இடமளித்த நிலையில், அட்மின் பதிவிட்டிருக்கிறார் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு-அதிகாரத்தில் பங்கு என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி 1999ஆம் ஆண்டு முதன்முதலாகத் தேர்தல் களத்திற்கு வந்தபோதிலிருந்து முன்வைக்கும் இலட்சியம்தான் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தெரிவித்திருக்கிறார். எந்த ஓர் அரசியல்கட்சியும் ஆட்சிக்கு வரவேண்டும், அதிகாரத்தில் பங்கு பெறவேண்டும் என்று திட்டமிடுவதும் அதற்கேற்ற அரசியலை செய்வதும் இயல்பானதுதான். ஒடுக்கப்பட்டோர் உரிமைக்கான இயக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதை வலியுறுத்துவது என்பது பட்டியல் இன மக்களின் அதிகார உரிமை நோக்கிய நகர்வாக அமையும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனிக்கட்சிகளின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சி என்பது அமையவில்லை. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தருவதில்லை. தேர்தலில் சீட் பங்கீடு என்ற அளவில்தான் இங்கே கூட்டணிகள் உள்ளன. எனவே, ஆட்சியில் இருக்கிற-ஆட்சியில் இருந்த இரண்டு பெரிய கட்சிகளின் தலைமை, நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைத்து நிலைகளிலும், கூட்டணிக் கட்சியிடமிருந்து ஆட்சியில் பங்கு-அதிகாரத்தில் பங்கு என்ற குரல் வந்தால் அது பதற்றத்தை உருவாக்குகிறது. ஊடகங்களுக்கும் அது தீனியாக அமைகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று, தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. கால் நூற்றாண்டுக்கு மேலான தேர்தல் கள அரசியல் பங்கேற்பில் இந்த இடத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வந்துள்ள நிலையில், இந்த 25 ஆண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள பட்டியல் இன மக்களின் உரிமைகள் சார்ந்த நிலைப்பாடுகள், பட்டியல் இன மக்களுக்கான புதிய அமைப்புகள் ஆகியவையும், பட்டியல் இன மக்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு உள்ளிட்டவை வி.சி.க.வுக்கு களத்தில் சவால்களை உண்டாக்கியுள்ளன. இந்த நிலையில், பட்டியல் இன மக்களுக்கான அரசியல் அதிகாரம் என்ற முழக்கத்தை முன்வைக்க வேண்டிய கட்டாயம் வி.சி.க.வுக்கும் அதன் தலைவருக்கும் உருவாகியுள்ளது.
மதுவிலக்கு மாநாடு, அதற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட எதிரணிக் கட்சிகளுக்கான அழைப்பு, தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பு உள்ளிட்டவை இந்தப் பின்னணியின் வெளிப்பாடுதான். ஒரு கூட்டணியில் இருப்பதாலேயே கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் அனைத்துக் கொள்கைகளுக்கும் உடன்பட்டுவிட முடியாது என்பதும், கூட்டணியில் உறுப்பாக இருக்கும் கட்சிகளுக்கென்ற தனிப்பட்ட பார்வை உண்டு என்பதும்தான் வி.சி.க வலியுறுத்த விரும்புகிற கருத்தாகும். இது ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறையும்கூட.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அமைச்சரவையில்-அதிகாரத்தில் பங்கு தருவது என்பது கூட்டணிக்குத் தலைமை தாங்குகிற கட்சியின் வலிமை எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்ததாகும். எதிர்வரும் தேர்தல் களத்தில் பெரிய கட்சிகளின் தனிப்பட்ட வலிமை சார்ந்தே இதன் மீதான அணுகுமுறை அமையும். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி ஆட்சிக்கு இதுவரை தயாராக இல்லை. எதிர்கால அரசியல் களம் எப்படி அமைகிறது என்பதன் அடிப்படையிலேயே ஆட்சியில் பங்கு என்கிற வி.சி.க.வின் நீண்டகால கோரிக்கை கனியும் காலம் அமையும். அதுவரையிலான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிவிட்டு, கூட்டணியில் விரிசல் இல்லை என்றும் அறிவித்திருக்கிறார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்.
தற்போதைய சூழல்களை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல்ரீதியிலான பார்வைகளோ சர்ச்சைகளோ பயன்தராது. முதிர்ச்சியான ஜனநாயகம் என்பது அனைவருக்குமான அதிகாரத்தை உறுதி செய்வதுதான். அது எந்த வகையில் என்பதை அரசியல் களம் தீர்மானிக்கும்.