தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தவுள்ள மாநாடு அரசியல் களத்தில் பலவித எதிர்பார்ப்புகளை உண்டாக்கியுள்ளது. கள்ளக்குறிச்சிதான் அண்மையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த விஷச்சாராய சாவுகளுக்கான மையமாக இருந்தது. தமிழ்நாட்டில் இதற்கு முன் கள்ளச்சாராய சாவுகள் பல நடந்திருந்தாலும், தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்த விஷச்சாராய சாவுகள்தான் எண்ணிக்கையில் அதிகம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது வரை தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், மதுவிலக்கு மாநாட்டை முன்னெடுப்பதும், அதற்கு அ.தி.முக. உள்ளிட்ட கட்சிகளுக்குப் பொதுவான அழைப்பை விடுத்திருப்பதும் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
“மதுவை எதிர்க்கும் எந்தக் கட்சிக்குமான பொதுவான அழைப்பு இது” என்றும், “மதவாத சாதியவாத சக்திகளான பா.ஜ.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் அழைப்பு இல்லை” என்றும் தொல்.திருமாவளவள் விளக்கம் அளித்துள்ளார். தி.மு.க.வுக்கும் மது எதிர்ப்புக் கொள்கை கொண்ட கட்சிதான் என்பதால் ஆளுங்கட்சியினரும் பங்கேற்கலாம் என்பதுதான் திருமாவளவன் சொல்ல வரும் செய்தி. மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தி.மு.க. அரசை நோக்கிய கோரிக்கை. மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள், சீர்கேடுகள் இவைதான் மாநாட்டின் மையப் பொருள். அப்படியிருக்கையில் ஆளுங்கட்சியான தி.மு.க. இதில் நேரடியாகப் பங்கேற்பதற்கு வாய்ப்பில்லை. மறைமுகமாக எதிர்ப்புத் தெரிவிக்கும் பதிவுகள் இப்போதே சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இருந்த மதுவிலக்கு, 1971ல் தி.மு.க. ஆட்சியில் தளர்த்தப்பட்டது. பின்னர் 1973ல் மீண்டும் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்து, மதுவிற்பனை தடை செய்யப்பட்டது. பின்னர் 1989ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது மலிவு விலை மது விற்பனை அறிமுகமானது. அ.தி.மு.க.வின் கொள்கையும் மது ஒழிப்பு அல்ல. 1973ல் மூடப்பட்ட மதுக்கடைகள் எம்.ஜி.ஆர். ஆட்சியில் மீண்டும் திறக்கப்பட்டன. கள்-சாராயக் கடைகளும் திறந்துவீடப்பட்டன. டாஸ்மாக் நிறுவனத்தைத் தொடங்கியது எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. ஆட்சி என்றால், அதில் சில்லறை விற்பனையை அரசே நடத்துவதில் தொடங்கி, சாதாரண பார் முதல் எலைட் பார் வரை உருவாக்கியது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி.
தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு சொந்தமான மது உற்பத்தி தொழிற்சாலை உண்டென்றால், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் வீட்டு முகவரியில் தங்கியிருந்த அவரது தோழி குடும்பத்தினரே மது உற்பத்தி தொழிற்சாலைகளை நடத்தினர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்த மது அரசியல். காங்கிரஸ், பா.ஜ.க. ஆண்ட-ஆள்கிற மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய விஜயமல்லையாவின் மது ஆலைகைளில் தொழில் கூட்டாளிகளான அரசியல் பிரமுகர்களும் உண்டு.
அரசு அனுமதி பெற்ற மதுபானங்கள் போக, சொந்தமாக காய்ச்சி விற்கும் குடிசைச் தொழில் எல்லா ஆட்சிக் காலத்திலும் எல்லா மாநிலங்களிலும் நீடிக்கிறது. இந்தியாவில் மதுவிலக்கு சட்டரீதியாக தளர்த்தப்படாத ஒரே மாநிலம், குஜராத். காந்தி பிறந்த மண் என்பதால் இந்த நிலை என்றாலும், வீட்டுக்கு வீடு டோர் சப்ளை செய்யும் அளவிற்கு அங்கே சாராயம் புழங்குகிறது. தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு சாராய பாக்கெட்டைப் பட்டப் பகல் வெட்ட வெளிச்சத்தில் விநியேகம் செய்தார்கள் குஜராத் மாநில ஆளுங்கட்சியினர். பீகார் மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் வழக்கமான குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும், அன்றாட குடிப்பழக்கத்தின் அளவு குறைந்திருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், கள்ளச்சாராய சாவுகள், சாராயம் காய்ச்சும் தொழில் இரண்டும் தொடர்கின்றன. மாற்று போதை மருந்துகள் பெருகியுள்ளன. அவை இளைஞர்களிடம் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன.
மதுவை ஒழிப்போம் என்பது கவர்ச்சிகரமான முழக்கம். அது பொதுவான அளவில் வரவேற்பிற்குரியது. நடைமுறையில் முழுமையான மதுவிலக்கு என்பது எங்குமே இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும் கோரிக்கையின் அடிப்படையில் மது விற்பனைக்கும், மதுக்கடைகளின் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு வந்தால் அதுவே வெற்றிதான். இதனை கூட்டணியின் தலைவரான முதலமைச்சரிடம் நேரடியாகவே வலியுறுத்தலாம். அதற்குப் பதிலாக, மாநாடு நடத்துவது என்பது அடையாள அரசியலின் தேவையா, கூட்டணி மாற்றத்திற்கான சிந்தனையா என்பது விரைவில் தெளிவாகிவிடும்.