விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கால் நூற்றாண்டுக்கும் மேலான போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இரண்டு எம்.பி.க்களை பெற்றதன் மூலம் அக்கட்சி ‘மாநில கட்சி’அந்தஸ்தை பெற்றுள்ளது.
அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவதற்கு, சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில் 3 சதவிகித வெற்றி பெற்றிருக்க வேண்டும். மக்களவை தேர்தலில் மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் 1 இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் கூட எட்டு சதவிகித வாக்குகளை பெற வேண்டும்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விசிக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அங்கீகாரம் பெற தகுதி பெற்றிருக்கிறது.
இந்த வெற்றிக்காகத்தான் கூட்டணி நிர்பந்தித்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல், தனி சின்னத்தில் நின்றது விசிக. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் தனி சின்னத்தில் பானை சின்னத்தில் போட்டியிட்டு கடைசிவரை போராடி வென்றார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் நின்று எளிதாக வெற்றியை பெற்றார்.
ஆனால் இந்த முறை இரண்டு பேருமே கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்லை என்று தனி சின்னத்தில் பானை சின்னத்தில் போட்டியிட்டனர். அதில் வென்றுள்ளனர்.
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன், ‘’சிதம்பரம் – விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை விசிக பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ‘’1999ம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் இருக்கும் எங்களின் கால் நூற்றாண்டு கால உழைப்பிற்கு, போராட்டத்திற்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர்’’ என்று சொல்லி நெகிழ்ந்தார்.
இந்த அங்கீகாரம் குறித்து, ’’விடுதலைச்சிறுத்தைகள் இயக்கம் தேர்தல் புறக்கணிப்பு பாதையிலிருந்து விலகி தேர்தல் பாதையில் பங்கேற்று பொன் விழா கொண்டாடி முடித்துள்ளோம். இந்த 25 ஆண்டுகளில் விடுதலைச்சிறுத்தைகளின் பயணம் நெருப்பாற்றில் நீந்திய பயணமாகும்.
வழக்குகளும் குண்டர் தடுப்புச்சட்டங்களுமே சிறுத்தைகளை தழுவின. வாய்க்கரிசி போட்டு விட்டு சிறுத்தைகளாய் வாருங்கள் என திருமா அறைகூவல் விடுத்த பிறகும் சிறுத்தைகளின் பாய்ச்சல் தீவிரமானது.
காவல்துறையின் ஒடுக்குமுறை அரச பயங்கரவாதமாக சிறுத்தைகளை குதறியது. ஆனாலும், சிறுத்தைகள் வலிமையாக மக்களை பாதுகாப்பதில் உறுதியாக சமரசமில்லாமல் போராடினோம்.
தேர்தல் பாதைக்கு வந்ததும் மக்களை பாதுகாக்கவும் இயக்கத்தை வலிமைப்படுத்தவுமே என்பதை தலைவர் திருமா அவர்கள் பிரகடனப்படுத்தினார். கொண்ட கொள்கையில் உறுதியை காட்டு!கொள்கை சிதையாமல் உத்தியை மாற்று! என தேர்தல் பாதையில் 1999 ஆம் ஆண்டு சிறுத்தைகள் அடி எடுத்து வைத்தது.
கடந்த 25 ஆண்டுகளாக விடுதலைச்சிறுத்தைகளின் போராட்டங்கள் மக்கள் மன்றத்திலும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் உரத்து முழங்கின.
மக்களிடம் அங்கீகாரம் பெற்ற கட்சியாக வலிமையாக வளர்ந்தது. ஆனால்,தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
2009 ஆம் ஆண்டே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை விடுதலைச்சிறுத்தைகள் பெற்றிருப்போம்.ஆனால் அது நடைபெறவில்லை.
கட்சி அங்கீகாரம் பெறவும் கட்சிக்கான சொந்த சின்னம் பெறவும் இலக்காக வைத்து கடுமையாக உழைத்தோம். அந்த உழைப்பின் விளைச்சலாக இதோ 2024 ஆம் ஆண்டு அங்கீகாரம் பெறப்போகிறோம்.
இந்த வெற்றி அறிவிப்பு தலித்களுக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; சனநாயகத்தின் வெற்றியாகும்.’’ என்று விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு குறிப்பிட்டிருக்கிறார்.