வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்து நாட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுவேலாவின் தலைநகர் கராக்கஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக, அதிபர் மதுரோவுடன் (Nicolas Maduro) அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸையும் அமெரிக்க படைகள் சிறைப்பிடித்து நாடுகடத்தியதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே வெனிசுவேலாவிலிருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியில், போதைப் பொருள் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி வெனிசுவேலா அரசுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாகவே இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், அதிகாலை நேரத்தில் கராக்கஸ் உள்ளிட்ட நகரங்களில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். முக்கிய ராணுவ தளங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக வெனிசுவேலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதல் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான வெளிப்படையான மீறல் எனவும், இது லத்தீன் அமெரிக்க முழுவதையும் பெரும் குழப்பத்திற்குள் தள்ளும் அபாயம் கொண்டது எனவும் வெனிசுவேலா அரசு எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், வெனிசுவேலாவில் (Venezuela) வசித்து வரும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிலைமை மிகுந்த பதற்றமாக உள்ளதால், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அமெரிக்க குடிமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து வெனிசுவேலா அரசு செயல்படுவதாக டிரம்ப் கடுமையாக குற்றம்சாட்டி வந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த ஐந்து மாதங்களாக அமெரிக்கா பொருளாதார தடைகள், கடற்படை குவிப்பு, மற்றும் ராணுவ அழுத்தங்களை அதிகரித்தது. வெனிசுவேலா அரசின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், அதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் டிரம்ப் பலமுறை கூறியிருந்தார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று கூட, நிகோலஸ் மதுரோ “கடுமையாக விளையாடினால், அதுவே அவருக்கான கடைசி விளையாட்டாக இருக்கும்” என்று டிரம்ப் (Donald Trump) எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்த எச்சரிக்கை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த சம்பவம் லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல நாடுகள் உடனடியாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டை கோரியுள்ளன. தொடர்ந்து, சர்வதேச சட்டம் மற்றும் ஒரு சுயாதீன நாட்டின் இறையாண்மை குறித்து கடும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த நிகழ்வுகள் உலக அரசியலில் புதிய நெருக்கடியை உருவாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவும், வெனிசுவேலாவின் பொருளாதாரத்தை நசுக்கவும் அமெரிக்கா முயற்சிப்பதாக வெனிசுவேலா அரசு மற்றும் அதன் ஆதரவு நாடுகள் குற்றம் சாட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
