இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ‘Venus Orbiter Mission’ என்கிற வெள்ளி சுற்றுகலன் திட்டம் மூலம் ஒரு புதிய விண்வெளி சாகசத்திற்கு தயாராகி வருகிறது இந்தியா.
செவ்வாய் சுற்றுகலன்(மங்கள்யான்) திட்டம் மற்றும் சந்திரயான் திட்டங்களின் வெற்றிக்குப் பிறகு, இந்தியா இப்போது வெள்ளி கோளை ஆராய புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறது.
கடந்த செப்டம்பர் 18-ம் தேதி வெள்ளி சுற்றுகலன் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை வரும் 2028-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், இதற்காக ரூ.1,236 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
வெள்ளிக்கோள் பூமியை போல் ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் புவியின் “சகோதரிக் கோள்” எனப்படுகின்றது. இக்கோள் பூமிக்கு மிக அருகிலுள்ள கோள் என்பதால், வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும்.
‘வெள்ளி சுற்றுகலன் திட்டம்’
வெள்ளி சுற்றுகலன் திட்டத்திற்கு, தற்காலிகமாக “சுக்ராயன்-1” என்று பெயரிடப்பட்டுள்ளது; இது வெள்ளிக்கு இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட பயணமாகும்.
அதிநவீன அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி கோளின் வளிமண்டலம், மேற்பரப்பு மற்றும் நிலவியல்(Geological) அம்சங்களை ஆய்வு செய்ய இந்த திட்டம் வடிவமைக்கப்படுகிறது.
கோளின் காலநிலை, வளிமண்டல அமைப்பு, எரிமலை மற்றும் நில அதிர்வு நிகழ்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய முக்கியமான தரவுகளை சேகரிக்கவும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெள்ளி கோளின் சுற்றுப்பாதையில் – துல்லியமாக படம் பிடிக்கும் திறமை கொண்ட SAR ரேடார், அகச்சிவப்புக் கதிர் மற்றும் புற ஊதா கதிர் கேமராக்கள், கோளின் Ionosphere வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் சென்சார்கள் பொருத்தப்பட்ட ஒரு விண்கலத்தை நிலைநிறுத்தி ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
முதன்மையாக கார்பன் டை ஆக்சைடு மற்றும் சல்பூரிக் அமிலத்தால் ஆன வெள்ளி கோளை மறைக்கும் அடர்த்தியான மேகங்கள் பற்றிய முக்கிய தரவுகளையும், எரிமலைகளின் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் இந்த திட்டம் ஆராய உதவும்.
வெள்ளி கோளை ஆய்வு செய்ய இந்தியா ஆர்வம் காட்டுவது ஏன்?
வெள்ளி கோளின் ஆராய்ச்சி, பூமியின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் என கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் பெருங்கடல்கள் இருந்ததாக நம்பப்படும் வெள்ளி கோளின் மேற்பரப்பு வெப்பநிலை 470 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது எப்படி? என்கிற கேள்வி உள்ளது.
வெள்ளியின் காலநிலையை பூமியுடன் ஒப்பிடுவதன் மூலம், காலநிலை மாற்றம், வளிமண்டல இயக்கவியல் மற்றும் கோளின் பரிணாமம் பற்றிய தடயங்களைக் கண்டறிய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி கோளை ஆராய்வதான் மூலம் பூமியின் எதிர்காலம் மற்றும் ஒரு கோளை வாழக்கூடியதாக மாற்றும் காரணிகள் பற்றிய நுண்ணறிவுகளையும் வழங்க முடியும் என நம்பப்படுகிறது.
இஸ்ரோவைப் பொறுத்தவரை, இந்த திட்டம் அதன் விண்வெளி ஆய்வு திறன்களில் மற்றொரு பாய்ச்சலைக் குறிப்பதாக அமையும்.
வெள்ளி கோளின் தீவிர வெப்பநிலை மற்றும் அடர்த்தியான வளிமண்டலம் காரணமாக அதை ஆராய்வது கடினமான பணியாக பார்க்கப்படுகிறது. ஆகையால், இஸ்ரோவின் இந்த திட்டம் வெற்றிபெற்றால், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேறிய நாடாக திகழும்.
சமீபத்திய ஆண்டுகளில், NASA, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் ரஷ்யாவின் Roscosmos ஆகிய விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் அனைத்தும் வெள்ளி கோளை ஆராய்வதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன.
பிற நாடுகளின் வெள்ளி கோள் ஆய்வு திட்டங்கள்:
நாசாவின் DAVINCI+ மற்றும் VERITAS (2028-2030 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டம்)
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் EnVision (2030-களின் முற்பகுதியில் செயல்படுத்த திட்டம்)
ரஷ்யாவின் Venera-D (தொடக்க நிலையில் உள்ளது)
2020-ம் ஆண்டில் வெள்ளி கோளின் வளிமண்டலத்தில் பாஸ்பைன்(Phosphine) வாயு இருப்பதாக கண்டறியப்பட்டது. அது வெள்ளி கோளின் மேகங்களில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு பற்றிய ஊகங்களை தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.